Published : 30 Aug 2024 04:38 PM
Last Updated : 30 Aug 2024 04:38 PM

சென்னை பேருந்து நிறுத்தங்களில் சாய்வுதள வசதி சம்பிரதாயத்துக்காக அமைக்கப்படுகிறதா?

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் கீழ் உள்ள மாநகராட்சி நிழற்குடை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற ஏதுவாக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் ஆக்கிரமிக்கப்பட்டு பழக்கடையாக செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 418 கிமீ நீளத்துக்கு 488 பேருந்து சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் மாநகராட்சி சார்பில் 750-க்கும் மேற்பட்ட பேருந்து நிழற்குடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சில பேருந்து நிழற்குடைகள் அமைந்துள்ள பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பேருந்தில் ஏறும் வகையில் சாய்வு தளம் மற்றும் கைப்பிடி வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து இடங்களிலும் இந்த கட்டமைப்பு பயன்பாடற்று கிடக்கின்றன. சில இடங்களில் முழு பேருந்து நிழற்குடையும், சில இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளமும் ஆக்கிரமிக்கப்பட்டு பழக்கடைகளாகவும், பூக்கடைகளாகவும் மாறியுள்ளன. சில இடங்களில் பேருந்துக்கு காத்திருப்போர், அமரும் பகுதியாகவும் மாறியுள்ளது.

குறிப்பாக திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலைய பேருந்து நிறுத்த நிழற்குடையின் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சாய்வுதளம் மற்றும் கைப்பிடி பகுதி முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு பழக்கடையாக மாறியுள்ளது. வியாசர்பாடி தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பூக்கடை செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் கூறும்போது, “பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் மாநகராட்சி சார்பில் நிழற்குடைகளில் எங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளம் தொடர்பாக, பேருந்து ஓட்டுநர்களுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை.

அவர்கள்சாய்வு தளத்தையொட்டி அணைத்தவாறு ஒரு நாளும்பேருந்துகளை நிறுத்தியதில்லை. அதனால் நாங்களும் அந்த சாய்வு தளத்தில் ஏறி, பேருந்துக்காக காத்திருக்காமல், பொதுமக்களுடன் காத்திருந்து பேருந்தில் ஏற வேண்டியுள்ளது. வியாசர்பாடி பேருந்து நிறுத்தத்தை ஒட்டி பேருந்து நிற்க இடையூறாக மற்றொரு சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தத்துக்கு முன்பும், பின்பும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இப்படி இருந்தால், மாற்றுத்திறனாளிகளுக்காக பேருந்தை, நிறுத்தத்தை ஒட்டியவாறு நிறுத்தவே முடியாது. வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சாய்வுதளம் அமைக்கப்பட்ட பகுதிக்கு எதிரே வேகத்தடையும், பள்ளமும் உள்ளது.அந்த சாய்வு தளத்தை ஒட்டி பேருந்தை நிறுத்தவே முடியாது. ஏதோ சம்பிரதாயத்துக்காக மாநகராட்சி அமைக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது” என்றனர்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் உரிமை கூட்டமைப்பை சேர்ந்த சதீஷ்குமார் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டத்தை இயற்றியது. அதில் மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை மாநகராட்சியில் சில பேருந்து நிறுத்தங்களில் மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியும் இன்றி பேருந்தில் ஏறும் வகையில் சாய்தளம் மற்றும் கைப்பிடிகளை அமைத்துள்ளது. ஆனால் இந்த இடத்தை ஒட்டி பேருந்து நிற்க வேண்டும் என்றால், பேருந்து நிறுத்தத்துக்கு முன் பகுதி மற்றும் பின் பகுதியில் குறைந்தது 50 மீட்டர் நீளத்துக்கு பயணிகளோ, ஆட்டோக்களோ சாலையில் காத்திருக்கக்கூடாது.

ஆனால் அத்தகைய சூழல் சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் இல்லை. சொல்லப்போனால் பெரும்பாலான பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்பதே இல்லை. மாநகராட்சிசார்பில் பேருந்து நிறுத்தங்களில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகளால் எந்த பயனும் இல்லை.

நாங்களும் ஏற்படுத்தி இருக்கிறோம் என ஆவணப் படுத்திக்கொள்ளலாம். பயன்பாடு இல்லாததால், அவை ஆக்கிரமிக்குக்கு உள்ளாகின்றன. இதுபோன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அது பயனில்லாமல் போதவதை விட, மாநகரம் முழுவதும் தாழ்தள பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் தாழ்தள பேருந்துகளை இயக்குமாறு மத்திய அரசும் அறிவுறுத்தியுள்ளது. 100 சதவீதம் தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும்போது, மாற்றுத் திறனாளிகள் மட்டுமல்லாது, முதியோர், கர்ப்பிணிகள், நோயாளிகள் என அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “பேருந்து நிறுத்தங்களில் மாநகராட்சி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் அமைப்பதில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறோம். அது அவர்களுக்கு பயன ளிக்கும் வகையில் இருக்கும்” என்றனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஏற்கெனவே 350 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்குவந்துள்ளன. அதன் நிறைகுறைகளை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x