Published : 30 Aug 2024 02:56 PM
Last Updated : 30 Aug 2024 02:56 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகச் சொல்லி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் 245 பேருக்கு ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பணியிட மாறுதலுக்கான வழிகாட்டுதலின் படி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இந்த கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் அதனை சரி செய்து கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பள்ளி கல்வித்துறை அறிவித்தப்படி நேற்று பணியிட மாறுதல் கலந்தாய்வை தொடங்கியது. முதல் நாளான நேற்று, கிராமப்புறங்களில் வேலை செய்த ஆசிரியர்கள் நகர்ப்புற பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு நகர்ப்புற பள்ளிகளை தேர்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நகர்ப்புற பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் கிராமப்புற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கான கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்க இருந்தது. இதற்காக கல்வித்துறை அலுவலகத்துக்கு வந்த ஆசிரியர்கள் பலர் கலந்தாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வித்துறை அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் உயரதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் கூறும்போது, “57 வயது முடிந்தால் கிராமப்புறத்துக்குச் செல்ல வேண்டியதில்லை. நகரப்புற பகுதியில் பணியாற்றலாம் என அரசாணை உள்ளது. ஆனால், இந்தக் கலந்தாய்வை கடந்த 2023 டிசம்பர் 31-ம் தேதியைக் கணக்கிட்டு நடத்துவதாக கல்வித்துறை கூறியுள்ளது. இதனால் 57 வயது கடந்த 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இந்தக் கலந்தாய்வு கொள்கையானது, ஓராண்டு காலம் என தீர்மானிக்கப்பட்டது.
அக்கொள்கைப்படி தற்போது கலந்தாய்வு நடத்துவது ஏற்புடையதல்ல. கவுரவ பட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்திவிட்டு அந்த இடங்களை மறைத்து, அவர்களை தாண்டி மூத்த ஆசிரியர்களை பணி அமர்த்துவது நியாயத்துக்கு புறம்பானது. ஆகவே, இந்த கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டு அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT