Published : 30 Aug 2024 02:48 PM
Last Updated : 30 Aug 2024 02:48 PM
கம்பம்: தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி அதிகளவில் கடத்தப்படுகிறது. இதைத் தடுக்கும் விதமாக மாநில எல்லையில் சோதனைகளை தீவிரப்படுத்த இருமாநில அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகள் தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. இங்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி அருகில் உள்ள கேரளாவுக்கு அதிகளவில் கடத்தப்படுகிறது. கேரளாவில் இந்த அரிசிக்கு கூடுதல் விலை கிடைப்பதால் இதுபோன்ற நிலை தொடர்கிறது.
கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் வாகனம், பொதுப்போக்குவரத்து மூலமும் தலைச்சுமையாகவும் அதிகளவில் ரேஷன் அரிசியைக் கடத்தும் நிலை உள்ளது. மொத்த வியாபாரிகள் பலர் அரிசியை மாவாக மாற்றி மாட்டுத் தீவனம் என்ற பெயரிலும் கொண்டு செல்கின்றனர்.
இதனால் ரேஷனுக்காக தமிழக அரசு ஒதுக்கும் மானியம் விரயமாவதுடன் தகுதியான பயனாளிகளுக்கும் ரேஷன் அரிசி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற கடத்தலை தடுப்பதற்காக அவ்வப்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கம்பத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு உத்தமபாளையம் கோட்டாட்சியர் கார்த்தியாயினி தலைமை வகித்தார். கேரளா சார்பாக பீர்மேடு வட்ட வழங்கல் அலுவலர் மோகனன், ஆய்வாளர்கள் ஷிபுமோன் தாமஸ், ரெஜி தாமஸ், தமிழகம் சார்பாக உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சுரேஷ், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் லட்சுமி, மகாலட்சுமி, வளர்மதி மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.
இதில், இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், சந்தேகப்படும் வாகனங்களின் பதிவெண், தனிநபர் தகவல்கள், அவர்களுடைய மொபைல் எண் போன்றவற்றை இருமாநில அதிகாரிகளும் பரிமாறிக்கொள்ள வேண்டும் எனவும் எல்லை பகுதிகளில் இரு மாநில அதிகாரிகளும் தொடர்ந்து கூட்டு சோதனைகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT