Last Updated : 30 Aug, 2024 02:29 PM

 

Published : 30 Aug 2024 02:29 PM
Last Updated : 30 Aug 2024 02:29 PM

‘வாழை’ திரைப்படம் பார்த்ததால் மாரி செல்வராஜை பாராட்டினேன்: திருமாவளவன் பளிச் பதில்

திருமாவளவன் | கோப்புப் படம்

புதுச்சேரி: "வாழை படத்தைப் பார்த்தேன் அதனால் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். தங்கலான் படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் ரவுண்டானா அருகே 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற, விசிக தலைவர் திருமாவளவன் அவதூறாகப் பேசியதாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஆஜராகாமல் இருந்தார். இதையடுத்து அவருக்கு இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிபதி ரமேஷ் பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து திருமாவளவன் புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: புதுச்சேரியில் 2014 ஜனவரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் உரையாற்றிய போது தலித் அல்லாத பிற சமூகத்துக்கு எதிராக பேசியதாகவும் பகையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் என் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவானவர் என்ற அறிவிப்போடு என்னை நீதிமன்றத்தில் ஆஜராக கூறினார்கள்.

அதனால் ஆஜராகி வழக்கை விரைந்து நடத்துமாறு கூறியுள்ளேன். இது பொய் வழக்கு. தள்ளுபடி செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்துள்ளோம். இந்தப் பொய் வழக்கில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என ஏங்கிக் கிடப்பவர்கள் வதந்தி பரப்புகின்றனர். விசிக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி கட்டுக்கோப்போடு உள்ளது. உரிமை தொடர்பாக எழுப்பும் குரல் வேறு. கூட்டணி தொடர்பாக கொண்டுள்ள நிலைப்பாடு என்பது வேறு. இந்த வதந்தி எங்கள் கூட்டணியை பாதிக்காது.

விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்வுகளில் கார் பந்தயமும் ஒன்று. இதுபோன்ற போட்டிகள் நடத்துவது தலைநகர் சென்னையில் சுற்றுலாவைக் கவர்ந்து இழுக்கக் கூடிய வாய்ப்பாக இருக்கும். தொழில் முதலீட்டாளர்களை சென்னை நோக்கி அழைக்க ஏதுவாக அமையும். பெங்களூரு, புதுடெல்லி போன்ற நகரங்களில் இந்நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் தான் அந்த நகரங்கள் தொழில் முதலீடுகளைப் பெறுகின்றன.

அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியின் காரணமாக நீதிமன்றமும் போட்டியை நடத்த அனுமதித்துள்ளது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரஞ்சித்தை ஏன் பாராட்டவில்லை என்ற கேள்விக்கு, ‘வாழை’ படத்தை பார்த்தேன். படம் நன்றாக இருந்ததால், அதன் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டினேன். ‘தங்கலான்’ படத்தை பார்க்கவில்லை. அதனால் இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்திக்கவில்லை என்று திருமாவளவன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x