Published : 30 Aug 2024 01:59 PM
Last Updated : 30 Aug 2024 01:59 PM
கோவை: கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை என்றபோதும் தமிழக - கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக.30) ஆய்வு செய்தார். அப்போது சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை தானியங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கிய குரங்கு அம்மை உலகம் முழுவதும் 121 நாடுகளில் பரவி உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை நடத்தப்படுகிறது.
நோய் பாதிப்பு உள்ளதா என கண்காணித்து சிகிச்சை அளிக்க தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காய்ச்சலை கண்டறியும் கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் பாதிப்பு ஏதும் இருக்கிறதா என்றும், குரங்கு அம்மை கொப்புளங்கள் உள்ளதா எனவும் பரிசோதித்து சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் கப்பல் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விமான பயணிகளிடையே குரங்கு அம்மை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1958-களில் இருந்து குரங்கு அம்மை பாதிப்பு இருந்து வருகிறது. தொற்று பாதிப்புகள் பரவலாகி விடக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் குரங்கு அம்மை சிகிச்சைக்கு சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை. இருப்பினும் தமிழக - கேரள எல்லை பகுதியில் மருத்துவ கண்காணிப்பை அதிகரித்து வருகிறோம். முதல்வர் அறிவித்தபடி பொங்கல் தினத்தன்று 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். விரைவில் எந்ததெந்த நகரங்களில் எத்தனை இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைய உள்ளது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கெனவே மத்திய அரசின் 800 மருந்தங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் தொற்றா நோய் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம், வீடுகளுக்கே சென்று சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை எம்.பி கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா, முன்னாள் எம்எல்ஏ-வான கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT