Last Updated : 30 Aug, 2024 12:45 PM

 

Published : 30 Aug 2024 12:45 PM
Last Updated : 30 Aug 2024 12:45 PM

முக்கிய மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை: புதுச்சேரி அரசு முடிவு 

புதுச்சேரி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தணிக்கை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது. அப்போது, ​​மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைத்தது. மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களை ஈடுபடுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

இதையடுத்து, மருத்துவக் கல்லூரிகள், அரசு பொதுமருத்துவமனை வளாகங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், மருத்துவமனைகளில் பாதுகாப்பு சூழலை மதிப்பிடவும் உயர் மட்ட ஆலோசனைக்குழு கூட்டத்தை புதுச்சேரி தலைமைச்செயலர் சரத் சவுகான் நடத்தியுள்ளார்.

இதுபற்றி தலைமைச்செயலக வட்டாரத்தினர் தெரிவித்ததாவது: மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மருத்துவ நிறுவனங்களில் காவல் துறையினருக்கான பதிவேட்டை வைத்திருக்க மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்படும். போலீஸார் தினமும் அங்கு மூன்று வேளை வந்து சென்றுள்ளார்கள் என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

மருத்துவமனை வளாகத்தை சுற்றி வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிடப்படும். தகவல்களைப் பகிரவும், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தனியார் பாதுகாப்புப் பணியாளர்களிடையே ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தவும் காவல் நிலைய அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் குறைபாடுகள் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பு சூழலை மேம்படுத்தவும் செயல் திட்டங்களை வகுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை தணிக்கை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x