Published : 30 Aug 2024 11:36 AM
Last Updated : 30 Aug 2024 11:36 AM
சான்பிரான்சிஸ்கோ: உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்பிங்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார்.
விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று, முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவுக்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோரும் முதல்வரை வரவேற்றனர்.
இந்நிலையில், 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
1. நோக்கியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 450 கோடி ரூபாய் முதலீட்டில், 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், சிறுசேரி சிப்காட்டில் உலகின் மிகப்பெரிய நிலையான நெட்வொர்க் சோதனை வசதி கொண்ட புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
2. பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் (Advanced development center focussed on AI) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
3. அமெரிக்க நாட்டின், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்ட் நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் கோவையில் பொறியியல் மையத்தை நிறுவி செயல்பட்டு வருகிறது. முதல்வர் முன்னிலையில் ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 150 கோடி ரூபாய் முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோயம்புத்தூர் சூலூரில் குறைக்கடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி (Product development and manufacturing facility for Semiconductor equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. மைக்ரோசிப் நிறுவனம் 2012 முதல் சென்னையில் இயங்கி வருகிறது. சென்னை மையம் IC வடிவமைப்பு, கணினி உதவி வடிவமைப்பு (CAD), பயன்பாடு மற்றும் மென்பொருள் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. சென்னையிலுள்ள இந்நிறுவனத்தில் சுமார் 550 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
மைக்ரோசிப் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் குறைக்கடத்தி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D Center in Semiconductor Technology) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
5. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நிறுவனம் தொழில் தொடங்கிட கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள எல்காட்டில் அலுவலக இடத்தை தேர்வு செய்துள்ளது. இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 50 கோடி ரூபாய் முதலீட்டில் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மதுரை எல்காட்டில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் (Technology and Global Delivery Center) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
6. தமிழ்நாட்டில் அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனம் விற்பனை, சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை சென்னையிலும், சேவை மற்றும் கள ஆதரவு வசதிகளை கோயம்புத்தூரிலும் அமைத்துள்ளது. அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (Advanced artificial intelligence enabled technology development center for semiconductor manufacturing and equipment) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வாறாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT