Published : 29 Aug 2024 08:45 PM
Last Updated : 29 Aug 2024 08:45 PM
புதுச்சேரி: மின் கட்டண உயர்வை ரத்து செய்யவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது தொடர்ந்து ஆண்டு தோறும் மின் கட்டணத்தை உயர்த்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி முன்னாள் பாஜக எம்எல்ஏ-வும், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவருமான சாமிநாதன் இன்று (ஆக.29) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புதுவை மக்கள் குப்பை வரி, வீட்டு வரி என வரி விதிப்புகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மின்கட்டண உயர்வு அவர்களை மேலும் பாதிக்கும். தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மின் கட்டண உயர்வு அரசு மீது மக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். இது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். மின் கட்டணத்தில் ஏற்கெனவே பல மறைமுக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய அரசால் முடியவில்லை.
கட்டணத்தை உயர்த்தும் அரசு மக்களுக்கான சேவையை வழங்கவில்லை. ஆகவே, அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், அல்லது மானியம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,” என்று அவர் கூறியுள்ளார். பாஜகவில் அதிக ஆண்டுகள் மாநிலத்தலைவர் பொறுப்பு வகித்த சாமிநாதன், பாஜக நியமன எம்எல்ஏ-வாகவும் இருந்தவர். இவர் ஆளும் கூட்டணிக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT