Published : 29 Aug 2024 07:29 PM
Last Updated : 29 Aug 2024 07:29 PM

சென்னை ஃபார்முலா-4 கார் பந்தயம்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

ஃபார்முலா 4 கார் பந்தயத்தையொட்டி சென்னை நேப்பியர் பாலத்தைச் சுற்றி கம்பி வேலிகள் அடைக்கப்பட்டுள்ளன.

சென்னை: சென்னையில் வரும் ஆக.31 முதல் செப்.1-ம் தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” ஆக.30 முதல் செப்.1 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி ஆக.30 முதல் செப்.1 வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வரும் வாகனங்கள்: > காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.

> மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

> சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்: > காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

> சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

> முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x