Published : 29 Aug 2024 08:16 PM
Last Updated : 29 Aug 2024 08:16 PM

கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க அதிவேக மீட்புப் படகு வழங்கக் கோரி ராமேசுவர மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் சிஐடியு சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

ராமேசுவரம்: நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக ராமேசுவரம் மீன்வளத் துறைக்கு அதிவேக மீட்புப் படகு வழங்க வலியுறுத்தி சிஐடியு கடல்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இன்று (வியாழக்கிழமை) ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை டல்வின்ராஜ் (45) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவருடன், சுரேஷ் (49), வெள்ளைச்சாமி (எ) முனியாண்டி (55), எமரிட் (49) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். திங்கட்கிழமை நள்ளிரவு அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது திடிரென படகின் பக்கவாட்டுப் பலகை உடைந்து படகு நீரில் மூழ்கி விபத்திற்குள்ளது. உடனடியாக படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து அருகில் இருந்த கச்சத்தீவை நோக்கி நீந்தத் துவங்கி உள்ளனர்.

இதில் டல்வின் ராஜ் , சுரேஷ் ஆகிய இருவரும் கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் செவ்வாய்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டனர். நடுக்கடலில் உயிரிழந்து மிதந்து கொண்டிருந்த மீனவர் எம்ரிட்-ன் உடல் மீட்கப்பட்டு புதன்கிழமை இரவு ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாயமான மீனவர் வெள்ளைச்சாமி (எ) முனியாண்டியை மூன்றாவது நாளாக இன்று (வியாழக்கிழமை) கச்சத்தீவு அதனையொட்டிய சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இரண்டு விசைப் படகுகளில் ராமேசுவரம் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமேசுவரம் மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலம் எதிரில் சிஐடியு கடற்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ கடல்தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி, நிர்வாகிகள் சுடலைக்காசி, முத்துப்பாண்டி, நம்பிராஜன், முனியசாமி மற்றும் மாயமான மீனவர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து சிஐடியு கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி பேசுகையில், “மீனவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், கடல் சீற்றம், சூறாவளி, புயல் உள்ளிட்ட நாட்களில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பேரிடர் காலங்கள் தவிர, சாதாரண நாட்களில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து தவறி கீழே விழுந்து காணாமல் போவது, படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டு கடலில் தத்தளிப்பது, கடல் நீர் புகுந்து படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, பாறைகளில் மோதுவது, நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் போவது என பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கடலில் காணாமல் போன மீனவர்கள் மற்றும் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்கவும் கண்டுபிடிக்கவும் மீன்வளத் துறைக்கெனத் தனியாக அதிவேக மீட்பு படகு வழங்க வேண்டும். அந்தைக் கோரிக்கையை வலியுறுத்தித்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்” என தெரிவித்தார்.

7 தமிழக மீனவர்கள் விடுதலை: கடந்த ஜூலை 23-ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கிய இசாக் ராபின், செல்வக்குமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன. படகுகளிலிருந்த ஆரோக்கிய ஹரி கிருஷ்ணன் (50), சகாய ராபர்ட் (49), யாகோப் (29), முத்துராமலிங்கம் (65) ராதா (44) சேகர் (40), பொன் ராமராஜ் (26), ராம்குமார் (24), லிபின் சாய் (25) ஆகிய 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், 7 மீனவர்களும் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும், முதல் விசைப்படகின் ஓட்டுநர் ஹரி கிருஷ்ணன் சகாய ராபர்ட் என்பவர் இரண்டாவது முறையாக சிறை பிடிக்கப்பட்டதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதமும், இரண்டாவது படகின் ஓட்டுநர் சகாய ராபர்ட் என்பவருக்கு ஒரு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்ட 7 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தண்டனை வழங்கப்பட்ட இரண்டு மீனவர்கள் கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x