Last Updated : 29 Aug, 2024 04:46 PM

 

Published : 29 Aug 2024 04:46 PM
Last Updated : 29 Aug 2024 04:46 PM

தமிழகத்தில் 3,000 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பாணை: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 3,000 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2025 ஜனவரி மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலர் சோ.மதுமதி அனைத்து மாவட்ட கருவூல கணக்கு அலுவலர்களுக்கும் இன்று (ஆக.29) அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையை கருத்தில் கொண்டு 3,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் தோற்றுவிக்கப்பட்டன.

இவை தற்காலிக பணியிடங்களாக இருப்பதால் அதில் பணியாற்றும் நபர்களுக்கு அவ்வப்போது தொடர் நீட்டிப்பு ஆணை வெளியிடப்பட்டு சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த 3,000 இடங்களுக்கான பணிக்காலம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. இதையடுத்து மேற்கண்ட பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதற்கான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரின் பரிந்துரையை ஏற்று இந்த 3,000 தற்காலிக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் வரும் ஜனவரி மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, அலுவலர்கள் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும்போது அதை ஏற்று ஊதியம் வழங்கப்பட வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x