Published : 29 Aug 2024 01:31 PM
Last Updated : 29 Aug 2024 01:31 PM
விழுப்புரம்: தமிழகத்துக்கு வந்துள்ள தொழில் முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என்று சொல்லும் முதல்வர் ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரியது எப்படி என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது: “தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள்கள் தொடர்பாக 9.99 லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்த புதிய தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ம் தேதி நான் அறிவுறுத்தி இருந்தேன். ஆனால், முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிகிறார். இன்றைக்கு, மரபு இல்லை என்று சொல்லும் இதே முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த அதிமுக ஆட்சியில் தொழில் துறை முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று ஆயிரம் முறை கோரினார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார்?
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு தொழில்கள் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் ரூ.17,616 கோடிகள் மட்டுமே இதுவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக் கூடாது. எனவே, இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டித் தேர்வும் நடத்தப்படவில்லை. இட ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.
தமிழகத்தில் 13 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர்கள் பணியிடம் காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதங்களாக காலியாக உள்ளது. உடனே கல்லூரி முதல்வர்களை நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ம் தேதியே பாமக வலியிறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக் கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஆகவே, இனியும் தாமதிக்காமல் மருத்துவக் கல்லூரி முதல்வர்களை நியமிக்கவேண்டும்.
தமிழகத்தில் சன்ன அரிசி கிலோ ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி கிலோ ரூ.65 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் அரசி தேவையாக உள்ளது. ஆனால், 72 லட்சம் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதை சரிசெய்ய தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய ஏதுவாக மின் கட்டணத்தை குறைக்கவேண்டும்.
தமிழகத்தில், மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால், இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் 10 பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுக்கொள் என்று அரசு சொல்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது: என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT