Published : 29 Aug 2024 12:53 PM
Last Updated : 29 Aug 2024 12:53 PM

‘‘பி.எட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்’’: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சென்னை: பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் (B.Ed) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும் என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அப் பல்கலைக்கழகங்களில் உயிர்கல்வி பயிலும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே, பி.எட் (B.Ed) தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x