Published : 29 Aug 2024 06:06 AM
Last Updated : 29 Aug 2024 06:06 AM

பழநியில் 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாள் ஆவணம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் கி.பி. 19-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத்தாளில் எழுதப்பட்ட ஆவணம்கிடைத்துள்ளது.

பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணத்தை, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கணியர் ஞானசேகரன் உதவியுடன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது: இந்த ஆவணம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரைத் தாளாகும். அதை பாலசமுத்திரம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா எழுதிஉள்ளார். இந்த முத்திரைத்தாள் 10.5-க்கு 16.5 செ.மீ. அளவில் உள்ளது. இந்த ஆவணம் ஜமீன்தாரிணி சின்னோபளம்மா சொல்படிஎழுதப்பட்டு, அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது. ஆவணம் மொத்தம் 31 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

தனது ஜமீன் பண்ணையின் 23ஏஜென்டுகள் பெயர்களை எழுதி,அதை மானேஜர்களின் விவரப் பத்திரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் பதிந்து வைத்திருக்கிறார். இந்த விவரப் பத்திரம் ஈஸ்வர ஆண்டு மாசி மாதம் 9-ம் தேதிஎழுதப்பட்டுள்ளது. இது 1,818 பிப்ரவரி 21-ம் தேதியைக் குறிக்கிறது.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டவடிவ கட்டண முத்திரையானது, பத்திரத்தாளின் இடது மேல்புறம் ‘இன்டாக்ளியோ’ எனப்படும் அச்சு முறையில் தமிழ் (இரண்டணா), ஆங்கிலம் (Two Anna), உருது (தோஅணா), தெலுங்கு (இரடு அணா) ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

ஆவணத்தின் மேல் வலதுபுறத்தில் கம்பெனியின் வட்ட வடிவகருவூல முத்திரையில் `பொக்கிஷம்' என்று தமிழ், `டிரசரி' (Treasury) என்று ஆங்கிலம், `கஜானா' என்று உருது, `பொக்கிசமு' என்று தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

அன்றைய காலகட்டத்தில் பத்திரப் பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றது இந்த ஆவணத்தின் மூலம் தெரியவருகிறது. பத்திரத்தில் உள்ள 23 மானேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை, அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது.

இந்தப் பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவரான ஜமீன்தார் வேலாயுத சின்னோப நாயக்கர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படையால் பிடிக்கப்பட்டு, சென்னையில் சிறை வைக்கப்பட்டார்.

அங்கு அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவியான சின்னோபளம்மா, கிழக்கிந்திய கம்பெனியாரால் பெயரளவுக்கு ஜமீன்தாரிணி ஆக்கப்பட்டுள்ளார். ஆனால், ஜமீனின் உண்மையானஆட்சி அதிகாரம் கம்பெனியிடம்இருந்துள்ளது. கம்பெனியிடம் இருந்து மாதந்தோறும் 30 பொன் வராகனை சின்னோபளம்மா சம்பளமாகப் பெற்றுள்ளார்.

சின்னோபளம்மா இறந்த பிறகு, கம்பெனியின் வாரிசில்லா சட்டம் மூலம், பாலசமுத்திரம் ஜமீன் நேரடியாக கம்பெனி ஆட்சியின்கீழ்வந்தது. சின்னோ பளம்மா பெயரளவுக்கு ஜமீன்தாரிணியாக இருந்ததால், பால சமுத்திரம் ஜமீன் மீது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முழு அதிகாரம் இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x