Published : 29 Aug 2024 05:57 AM
Last Updated : 29 Aug 2024 05:57 AM
திருச்சி: புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்குவோம் என்று மத்திய அரசுஅழுத்தம் கொடுப்பதால், 15 ஆயிரம் ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டிய நிலைஏற்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்எஸ்ஏ) தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் வழங்க வேண்டிய பங்கீட்டுத் தொகை ரூ.573 கோடி மற்றும் கடந்த ஆண்டுதமிழக பள்ளிக்கல்வித் துறைக்குவரவேண்டிய கடைசி தவணையான ரூ.249 கோடி ஆகியவற்றை வழங்கவில்லை.
இதுதொடர்பாக மத்திய அரசைமுதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதானை சந்தித்து, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை தமிழகம் ஏற்றுக்கொண்டு, அதில் இணைந்தால் மட்டுமே, இந்த நிதியை வழங்க முடியும் என்று மத்திய அரசு நிர்பந்திக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைசமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற் கொண்டு வருகிறார். புதிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில், நிதியைநிறுத்துவது சரியல்ல. அந்த நிதிஒதுக்கப்படாததால் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணிபுரியும் 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியத்தை நிறுத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT