Published : 23 Jun 2018 09:44 AM
Last Updated : 23 Jun 2018 09:44 AM
நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு, குப்பைகளை அகற் றும் பணி பெரும் சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காண, மத்திய அரசு கடந்த 2016-இல் திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதில், குப்பைகளை வகை பிரித்துப் பெற வேண்டும். குப்பைகளை அகற்ற உள்ளாட்சி நிர்வாகங்களே கட்டணங்களை நிர்ணயிக்க துணை விதிகளை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் வரைவு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் குப்பைகளை உருவாக்குவோரிடம், அதை அகற்றுவதற்கான சேவைக் கட்டணமாக குடியிருப்புகளுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரிக்கு ஏற்றவாறு ஆண்டுக்கு ரூ.120 முதல் ரூ.600 வரையும், குடியிருப்பு அல்லாத, குடியிருப்புகள் உள்ளடங்களிய கட்டிடங்களுக்கு ரூ.300 முதல் ரூ.6,000 வரை வசூலிக்க வேண்டும்.
குப்பையை வகை பிரிக்காமல் வழங்குவது, குப்பைகளைப் பொது இடங்களில் வீசி எறிவது, புதைப்பது, எரிப்பது, கட்டுமானக் கழிவுகளுடன் வீட்டுக் கழிவுகளைக் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், குடியிருப்புகளுக்கு ரூ.1000, குடியிருப்பு அல்லாதவைக்கு ரூ.2,000, வர்த்தகர் களுக்கு ரூ.1000, நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் குப்பையை ஏற்படுத்தினால் ரூ.25,000, தெருவோரக் கடைகளில் குப்பைத் தொட்டியை வைக்காவிட்டால் ரூ.100, தோட்டக் கழிவுகளைப் பொது இடத்தில் கொட்டினால் ரூ.1000, பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் ரூ.100, பொது இடங்களில் வீட்டு பிராணிகள் அசுத்தம் செய்தால் ரூ.100 என அபராத மாக வசூலிக்கப்படும். அப்பணிகளை அந்தந்த பகுதி சுகாதார ஆய்வாளர் மேற்கொள்வார்.
இந்த விதிகளை அமலாக்க, வார்டு அமலாக்கப் படையை மாநகராட்சி ஆணையர் நியமிப்பார். ஆணையர் அல்லது ஆணையரால் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்ட அதிகாரி, எந்த நேரத்திலும் சோதனை நடத்தி, விதிமீறல் இருந்தால் உரிய அபராதம் விதிப்பார். இவ்வாறு வரைவு துணை விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
‘‘திடக்கழிவு மேலாண்மை விதிகளில் வரைவு துணை விதிகளை உருவாக்கி, அதை அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறோம். அந்த விதிகளைப் பொதுமக்களுக்கு விளக்க பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு, அதன் பின்னர் தேவை இருப்பின் துணை விதிகளில் திருத்தங்கள் செய்யப்படும். இந்த துணை விதிகள் இந்த ஆண்டே அமலுக்கு வரும்.
சென்னையில் மொத்தம் 11 லட்சத்து 85 ஆயிரம் உரிமையாளர் கள் சொத்து வரி செலுத்துகின்றனர். அவர்களுக்கு விதிக்கப்படும் சேவைக் கட்டணம் மூலம் ஆண்டு ரூ.64 கோடி வருவாய் கிடைக்கும். இக்கட்டணத்தை சொத்துவரியுடன் சேர்த்து வசூலிக்க இருக்கிறோம். அதற்காக சொத்து வரி ஆவணங்களில் திருத்தங்கள் செய்யப்படும்’’ என்றனர்.
சிங்கப்பூரில் சிறந்த மேலாண்மை
திடக்கழிவு மேலாண்மையில் சிறந்து விளங்கும் நாடாக சிங்கப்பூர் உள்ளது. அங்கு 1970-ம் ஆண்டு நாளொன்றுக்கு 1,260 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. அதுவே, கடந்த 2016-ம் ஆண்டு 8,559 டன்னாக உயர்ந்துள்ளது. அங்கு நிலப்பரப்பு மிகக் குறைவாக இருக்கும் நிலையில், அங்கு குப்பைகளைக் கொட்டி வைப்பது சாத்தியம் இல்லை. அதனால் அங்கு 1999-ம் ஆண்டிலிருந்து, சேகரிக்கப்படும் குப்பையில் பெரும்பாலானவற்றை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. குறைந்த அளவே நிலத்தில் கொட்டப்படுகிறது. அங்கு விதிகளை மீறி குப்பைகளைக் கொட்டினால் தண்டனை கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT