Published : 29 Aug 2024 12:11 AM
Last Updated : 29 Aug 2024 12:11 AM
திருச்சி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்ற படித்தவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகத்தில் ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. மதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை என்பதுதான் நிலைப்பாடு. மற்றபடி, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தியை தான் படிக்க வேண்டும் என்று திணிப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
வெளிநாட்டு மொழிகள் உட்பட, மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை படித்துக் கொள்ளலாம் என்றால், மூன்றாவது மொழியை ஏற்றுக் கொள்வோம். ஒரு ஐபிஎஸ் படித்த பெண் அதிகாரியை பொதுவெளியில் இணையதளத்தில் ஆபாசமாக குறிப்பிட்டு பதிவிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பிரச்சினைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது போன்ற போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். அதேநேரத்தில், தமிழகத்தில் நல்ல அரசியல் சூழல், பண்பான அரசியல் சூழல் நிலவுவதற்கு, ஒரு தம்பியாக அண்ணன் சீமான் அவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.
கொள்கை ரீதியான தாக்குதல்கள் ஜனநாயக முறைப்படி இருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையிலான தாக்குதல் கூடாது. அண்ணாமலை போன்ற படித்த இளைஞர்கள், அரசியலுக்கு ஒரு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். இந்த போக்கு, அண்ணாமலைக்கும், அவர் சார்ந்த இயக்கத்துக்கும் அது நல்லதல்ல” இவ்வாறு துரை வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT