Published : 28 Aug 2024 08:15 PM
Last Updated : 28 Aug 2024 08:15 PM
சென்னை: மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம். தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் த.அமிர்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்களை அரசு அலுவலர் ஒன்றியம் வரவேற்கிறது. மத்திய அரசு கடந்த 2004 ஜனவரி 1-ம் தேதி முதல் தனது அரசில் பணியாற்றும் அலுவலர்கள் அனைவரும் பயனடையும் ஒய்வூதிய திட்டமான பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களே, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் நிலைக்கு மத்திய அரசை தள்ளியுள்ளது. இத்திட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களான, 25 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு கடைசியாக பணியாற்றிய 12 மாத ஊதியத்தின் சராசரியில் 50 சதவீதம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை, 25 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒய்வூதியம் போன்றவற்றை முழுமையாக வரவேற்கிறோம்.
ஆனால், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பொருந்தாது. இந்த திட்டத்தை தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அமல்படுத்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் எப்போதும் கோராது. காரணம், கடந்த 2003 முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்து ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் தொடர்ந்து எதிர்ப்பதே அரசு அலுவலர் ஒன்றியத்தின் நிலைப்பாடாகும். ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்துடன், தமிழக அரசு இதுவரை ஒப்பந்தம் செய்யாததால், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT