Last Updated : 28 Aug, 2024 03:56 PM

 

Published : 28 Aug 2024 03:56 PM
Last Updated : 28 Aug 2024 03:56 PM

மின்கட்டண உயர்வு மூலம் மக்களுக்கு புதுச்சேரி அரசு துரோகம்: அதிமுக குற்றச்சாட்டு

போராட்டம்

புதுச்சேரி: “புதுச்சேரி அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் மின்கட்டண உயர்வு மூலம் துரோகம் இழைத்துள்ளது” என அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று (ஆக.28) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்எல்ஏ-வான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அதிமுகவினர் திரளாகக் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசை கண்டித்தும் மின்துறை தலைமை அலுவலகத்தின் கேட்டை மூடி, தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியை ஆளும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசானது மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் சோதனை மாநிலமாக புதுச்சேரியை நடத்தி வருகிறது. லாபத்துடன் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தை எவ்வித கவலையும் இன்றி செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தாண்டு மின் கட்டண உயர்வை அரசு முடிவு செய்து யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த ஜூன் 16-ம் தேதி மின்கட்டண உயர்வுக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதன் மூலம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டள்ளது. இந்த அறிவிப்பு 2 மாதத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டதுமே அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஆளும் அரசின் இந்த மக்கள் விரோத போக்கை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

மக்களின் தொடர் போராட்டத்துக்கு பிறகு முதல்வர், மின்துறை அமைச்சர் ஆகியோர் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், கட்டண உயர்வு திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தனர். ஆனால் இப்போது, திடீரென ஜூன் 16 உயர்த்தி அறிவிக்கப்பட்ட கட்டணம் மீண்டும் அதே கட்டண உயர்வில் வசூலிக்கப்படும் என்றும், அன்றைய தேதியிலிருந்து அரியர்சாக வரும் மாதங்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இது ஒரு மோசடியான செயலாகும். புதுச்சேரியை ஆளும் பாஜக -என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசானது ஏழை, எளிய, வர்த்தக, சிறிய குறு வியாபாரிகளை பற்றி கவலைப்படாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் மின்கட்டண உயர்வு மூலம் துரோகத்தை இழைத்துள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.2,000 மின் கட்டணம் செலுத்திய நடுத்தர வர்க்கத்தினர் இன்று மாதம் ரூ.5,000 மின்கட்டணமாக செலுத்தும் நிலையை அரசு உருவாக்கியுள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட மின்கட்டண உயர்வை முன் தேதியிட்டு அரியர்சோடு வசூல் செய்யும் அரசின் நடவடிக்கை என்பது அப்பாவி மக்களின் கழுத்தில் ஈரத்துணியை போட்டு இறுக்குவதற்கு சமமான செயலாகும்.

ஆகவே, உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திரும்பப்பெற வழியில்லையென்றால் அரசே உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வை மானியமாக வழங்க வேண்டும். இது சம்பந்தமாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அனுமதியோடு மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x