Published : 28 Aug 2024 03:38 PM
Last Updated : 28 Aug 2024 03:38 PM

தவெக மாநாட்டுக்கு பாதுகாப்பு: விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கு புஸ்ஸி ஆனந்த் மனு

சென்னை: விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சாலை கிராமத்தில் செப்.23-ம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட எஸ்பிக்கு, கட்சியின் பொதுத் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.

இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்த் எழுதியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் (செப்.23) அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம் . இந்த மாநாட்டில் எங்கள் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார்.

மாநாடு நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்குப் பெற்றுள்ளோம். எங்கள் மாநாட்டுக்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாடுக்காக தமிழகம் முழுவதும் இருந்து வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில் இடதுபுறம் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்குப் பெற்றுள்ளோம்.

இதில் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே பாதையில் வலதுபுறம் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம்.

மாநாட்டுக்கு வரும் கட்சியினரும், பொது மக்களும் எளிமையாக கூட்ட நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்கான மூன்று வழிகளும், வெளியே செல்வதற்கு மூன்று வழிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வேன்களும் அங்கு நிறுத்தப்பட உள்ளது. தீயணைப்புத்துறையின் அனுமதியும் பாதுகாப்பும் கோரவுள்ளோம்.

இம்மாநாட்டுக்கு காவல்துறை தரப்பில் இருந்து தாங்கள் கொடுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாநாட்டை முறையாக நடத்துவோம் என்று இக்கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு உறுதி அளிக்கிறேன். ஆகையால், மாநாட்டுக்குத் தேவையான முழு பாதுகாப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x