Published : 28 Aug 2024 02:41 PM
Last Updated : 28 Aug 2024 02:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மின்துறையானது ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது, டிஜிட்டல் மீட்டர் பொருத்துவது என்று அறிவித்ததுடன் மின் கட்டணத்தை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகிறது.
அதில் பல மறைமுக வரிகளையும் புகுத்தி வருகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதை பல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் கண்டித்து போராட்டம் நடத்தியும், அரசு இதை கவனத்தில் கொள்ளாமல் உள்ளது. கடந்த ஜூன் மாதம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இதை கண்டித்து பொதுநல அமைப்புகள் போராட்டம் நடத்தி முதல்வர், மின்துறை அமைச்சர், துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தனர்.
இதையடுத்து புதுச்சேரியில் மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அமலுக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இது சம்பந்தமாக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் எம்எல்ஏககள் தொடர் மின் கட்டணம் உயர்வு மற்றும் மின்துறையை தனியார் மயமாக்கல் போன்ற பிரச்சினைகளை பற்றி விவாதித்த போது இது சம்பந்தமாக முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சர் மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு உயர்த்தப்பட்ட மின்கட்டணம் அமலுக்கு வரும் என்றும், அத்துடன் அறிவிக்கப்பட்டபடி ஜூன் 16ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு மின் கட்டண உயர்வு வசூலிக்கவுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளது. இது பொதுமக்கள், வியாபாரிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் மின்கட்ட உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் பொதுநல அமைப்பினர் இன்று மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து மின்துறை தலைமை பொறியாளர் அறையின் முன்பு சென்ற பொதுநல அமைப்பினர் அங்கு தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர். மேலும் அங்கிருந்த மின்துறை தலைமை பொறியாளர் சண்முகத்திடம் மின்துறை உயர்வு குறித்து கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்சியாளர்கள் சொல்வதைத்தான் அதிகாரிகள் தாங்கள் செய்கின்றோம். இதில் தங்களுடைய பங்கு எதுவும் இல்லை என்று பொறியாளர் கூறினார். அதனை கேட்ட நேரு எம்எல்ஏ மற்றும் பொதுநல அமைப்பினர் தொடர்ந்து அங்கு போராட்டம் நடத்தி விட்டு புறப்பட்டு சென்றனர்.
இது பற்றி நேரு எம்எல்ஏ கூறும்போது, “மின்துறையானது மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, ஜூன் 16 முதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது. இது மக்களை வஞ்சிக்கும் செயல். புதுச்சேரி மாநிலத்தில் மின் தடை இல்லாத நாட்களே இல்லாத நிலையில் மின் கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே வருவது எந்த விதத்தில் நியாயம் என்பதை இந்த அரசும், மின்துறையும் மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஆகையால் இந்த மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். இந்த மின் கட்டண உயர்வை அரசு மானியமாக மக்களுக்கு வழங்க வேண்டும். இதில் அரசு உடனே தலையிட வேண்டும். இல்லாவிட்டால் முழு அடைப்பு நடத்துவதுடன், மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று எம்எல்ஏ நேரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT