Published : 28 Aug 2024 12:13 PM
Last Updated : 28 Aug 2024 12:13 PM
சென்னை: சென்னை - நாகர்கோவில் இடையே வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளநிலையில், இந்த ரயில் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்கள் விவரத்தை ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை, மதுரை - பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காணொலிக்காட்சி மூலமாக தொடங்கி வைக்கவுள்ளார். சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இரண்டு ரயில்கள் இயக்கப்படும் நேரம், நின்று செல்லும் ரயில் நிலையங்கள் விவரம் உள்பட பல்வேறு தகவல்களை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம்:சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்தரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 1.50 மணிக்கு அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.
மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை அடையும்.
மறுமார்க்கமாக, இந்த ரயில் பெங்களூரு கண்டோன்மென்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்தரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இவ்வாறு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...