Published : 28 Aug 2024 03:57 AM
Last Updated : 28 Aug 2024 03:57 AM
சென்னை: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஆக.27-ம் தேதி (நேற்று) அமெரிக்கா செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையொட்டி, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மரியாதை செலுத்தினார். இரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்.14-ம்தேதி தமிழகம் திரும்புவதுபோல பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நான் பயணம் செய்ததன் மூலம் தமிழகத்துக்கு பல்வேறு முதலீடுகள் வந்துள்ளன. இந்த பயணங்கள் மூலம் 18,521 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ரூ.10,882 கோடிமதிப்பிலான 17 ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டன. அதில், ரூ.990 கோடி முதலீட்டுக்கான 5 திட்டங்கள் தற்போது உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த ஆக.21-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில், இந்த 5 திட்டங்களில் சிங்கப்பூரை சேர்ந்தஹைபி நிறுவனம், ஜப்பானின் ஒமரான் நிறுவன திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்த திட்டங்களால் மட்டும் 1,538 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் பட்டுள்ளது. ரூ.3,796 கோடி மதிப்பிலான 3 திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன.
ஆக.21-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் ஜப்பானின் மிட்சுபா, செட்ராய்ட் நிறுவனங்கள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். ரூ.3,540 கோடி மதிப்பிலான 3 திட்டங்கள் பல்வேறு முன்னேற்ற நிலையில் உள்ளன. ரூ.438 கோடி மதிப்பிலான 2 விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் நிலையில் உள்ளன.
ரூ.2,100 கோடி மதிப்பிலான 4 திட்டங்களை பொருத்தவரை, அந்தந்த நிறுவனங்களின் தொழில் முதலீட்டு சூழல் காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் கையெழுத்திட்ட திட்டங்கள்அனைத்தும் துரிதமாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி. இதன்மூலம், 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி, 4.16 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.
கடந்த பயணங்கள் மூலம் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போல,தற்போதைய பயணம் மூலம் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன். இந்த முதலீடுகள் மூலம் தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றக்கூடிய இலக்கை விரைவாக அடைவோம். இதற்காக உலகின் கவனத்தை தமிழகம் நோக்கி ஈர்க்க, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவுக்கு செல்கிறேன். அங்கு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
பின்னர், செய் தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?
மாறுதல் ஒன்றுதான் மாறாதது. வெயிட் அண்ட் ஸீ...
அமைச்சர் துரைமுருகன் - ரஜினிகாந்த் விவகாரம் குறித்து?
அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள். அவர்களே சொல்லிவிட்டார்கள். அதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, பகைச்சுவையாக எடுக்க கூடாது.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டுக்கு பிறகு மத்திய அரசுடன் இணக்கமான நிலை உள்ளதா?
இணக்கமான நிலை என்பது உங்கள் எண்ணம். மத்திய அரசின் அனுமதியுடன் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த மரியாதை அடிப்படையில் அழைத்தோம்.
ஒட்டுமொத்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?
அது மரபு இல்லை. பல மாநிலங்களில் இருந்து போட்டி இருப்பதால், அதை விரும்ப மாட்டார்கள். முதலீடுகள் முழுமையாக வந்ததும் வெளியிடுவோம்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்கு முதல்வர் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், திமுக மூத்த நிர்வாகிகள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து கூறி முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT