Published : 01 Jun 2018 10:06 AM
Last Updated : 01 Jun 2018 10:06 AM
மாநிலத்துக்குள் அனுப்பப்படும் சரக்குகளுக்கான இ-வே பில் நடைமுறையானது நாளை (ஜுன் 2) அமலுக்கு வருகிறது. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வரைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகள் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலங்களுக்கு மத்தியிலும், மாநிலத்துக்கு உள்ளும் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு இ-வே பில் கட்டாயம்.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இணையத்தில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்ப முடியாது என்ற இந்த வரைமுறை கடந்த ஏப்ரல் முதல் தேதி அமல்படுத்தப்பட்டது.
ஆரம்ப நிலையில் எதிர்ப்பு
ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்துக்கு வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரைமுறைகளில் திருத்தங்களைக் கொண்டு வரவும், நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலை பிற சில மாநிலங்களிலும் நிலவியதால் மாநிலங்களுக்கு வெளியில் செல்லும் சரக்குகளைத் தவிர்த்து, மாநிலத்துக்குள் அனுப்பும் சரக்குகளுக்கு படிப்படியாக இதைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் ஜுன் 2-ம் தேதி, இது நடைமுறைக்கு வருகிறது.
திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நிர்ணயிக்கப்படும் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கட்டாயமாக இ-வே பில் தேவையாகும்.
இ-வே பில் இல்லையெனில் சரக்கின் மதிப்புக்கு ஏற்ப வரி மற்றும் நூறு சதவீத அபராதம் விதிக்கப்படும் என வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எளிமை, தெளிவு வேண்டும்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, “இ-வே பில் திட்டத்தை மாநிலத்துக்குள் தெளிவாகவும், எளிமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். இதுதொடர்பாக மேலும், அவர் கூறும்போது, ரூ.50 ஆயிரம் என்ற வரைமுறையை ரூ.2 லட்சமாக உயர்த்திக் கேட்டுள்ளோம். 10 கிலோ மீட்டருக்குள் செல்லும் சரக்குகளுக்கு இ-வே பில் தேவையில்லை என்று கூறியுள்ளனர். அதை 20 கிலோ மீட்டராக உயர்த்திக் கேட்டுள்ளோம்” என்றார்.
இதுகுறித்து வணிகவரித் துறை இணை ஆணையர் பழனி, ‘தி.இந்து’விடம் கூறியதாவது:
அறிவித்தபடி வரும் ஜூன் 2-ம் தேதி இ-வே பில் தமிழகத்துக்குள் நடைமுறைக்கு வருகிறது. திட்டத்தைப் பொறுத்தவரை வர்த்தகர்கள், சரக்குகளைக் கையாளுவோர் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவை பரிசீலனையில் உள்ளன. ஜூன் 2-ம் தேதிக்கு முன் நடைபெறவுள்ள இறுதிக் கூட்டத்தில் மாற்றங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
குறிப்பாக, குஜராத்தில் 20 பொருட்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. கேரளம், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் ரூ.50 ஆயிரம் என்ற வரைமுறை தளர்த்தப்பட்டு இந்த மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசனைக்குப் பிறகே தெரியும். திருத்தங்களை மேற்கொள்ள மாநில அரசின் அமைப்புக்கு அதிகாரம் அளிக் கப்பட்டுள்ளது.
படிப்படியாக செயல்பாடு
இந்தியா முழுவதும் மாநிலங்களுக்குள் இ-வே பில் முறை படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்து விட்டது. ஜூன் 1-ம் தேதி கோவா, ஜம்மு - காஷ்மீர், சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும், ஜுன் 2-ம் தேதி தமிழகத்துக்குள்ளும், ஜுன் 3-ம் தேதி மேற்குவங்கத்துக்குள்ளும் அமலுக்கு வருகிறது.
இடைப்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் இருந்த நடைமுறைச் சிக்கல்கள் பலவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இ-வே பில் சேவையை தற்போது செல்போன், குறுஞ்செய்திகள் மூலமாகவும் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் யாருக்கும் சிரமங்கள் இருக்காது. தவிர மத்திய, மாநில அளவில் உதவிக்கான எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை மூலமாகப் பெறப்படும் புகார்கள், தகவல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இ-வே பில் நடைமுறையால் சரக்கு போக்குவரத்தில் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் முடிவுக்கு வரும். அரசுக்கான வருவாய் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT