Published : 27 Aug 2024 08:56 PM
Last Updated : 27 Aug 2024 08:56 PM
திருச்சி: “குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிப் போரட்டம் செப்.15-ம் தேதி ஹரியாணாவில் தொடங்கும்,” என்று திருச்சியில் நடந்த கருத்தரங்கில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஐக்கிய விவசாயிகள் சங்கம் அரசியல் சார்பற்றது (சம்யுக்த்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம் (என்பி) சார்பில், மாநிலம் தழுவிய கருத்தரங்கம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (ஆக.27) நடைபெற்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்ப விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, எஸ்கேஎம் மாநில கன்வீனர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில், ‘வேளாண் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகள் முழுவதையும் நிறைவேற்றிட வேண்டும். இதை வலியுறத்தி தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி விவசாயிகளை அவமதிப்பதை ஏற்க முடியாது. மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது. மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டக்கூடாது.
தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். வேளாண் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அகில இந்திய அளவிலான 150க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர், எஸ்கேஎம் தமிழக கன்வீனர் பி.ஆர்.பாண்டியன், பி.அய்யாக்கண்ணு, தேசிய அளவிலான தலைவர்கள் ஹரியாணா லக்விந்தர் சிங், பஞ்சாப் அமர்ஜித் சிங், தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா சாந்தகுமார், கேரளா பிஜூ, தெலுங்கானா என்.வி.ராவ், மூத்தத் தலைவர் ராமகவுண்டர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: “இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இருந்த ஜெகஜித் சிங் டல்லேவால், பல்தேவ்சிங் சிர்ஷா உள்ளிட்ட 6 பேரில் 4 பேரை நேற்று மாலை டெல்லி விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி டெல்லி போலீஸார் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசு நடவடிக்கை என்பது டல்லேவால் கைது மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் அவமதிக்கும் செயல். குறைந்தபட்ச ஆதார விலை சட்டம், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கடந்த பிப்.13-ம் தேதி முதல் தொடர்ந்து 196 நாட்களாக பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் போராடி வருகிறோம். நான்கு வழிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் பேரணியை உச்சநீதிமன்றம் அனுமதித்தும் மத்திய அரசு ஏற்கவில்லை.
தற்போதும் மத்திய அரசு உடனடியாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், கார்பரேட் நிறுவனங்கள் துணை கொண்டு மத்திய அரசு விவசாயிகளின் போராட்டங்களை திட்டமிட்டு ஒடுக்க முயற்சிக்கிறது.இனியும் இதை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லி எஸ்கேஎம் சார்பில், செப்.1-ம் தேதி உத்தரப்பிரதேசம், ஹரியாணா, கர்நாடாகவில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. அதையடுத்து, செப்.15-ம் தேதி ஹரியாணாவில் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் இறுதிக்கட்டப் போராட்டம் நடைபெற உள்ளது. போராட்டத் தீவிரத்தன்மை அன்று அறிவிக்கப்படும்.
மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தனது ஆட்சி மூலம் நிறைவேற்றி வருகிறது. காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் தொடக்க நிலையிலேயே உள்ளது. திட்டமிட்டு நிதி ஒதுக்கீடை தவிர்த்திருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நிதி ஒதுக்காமல் பல மாநிலங்களை புறக்கணிக்கும் மத்திய அரசு கண்டிக்கிறோம். பிரதமர் மோடி சொன்னபடி, விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபம் தரும் விலையை தரவில்லை. 1970-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.600 லட்சம் கோடி லாபகரமான விலை விவசாயிகளுக்கு வழங்காமல் வங்கியில் உள்ளது. ஜனநாயக நாட்டில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால் உரிமையை வழங்காமல் விவசாயிகளை நசுக்குகிறது.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் (WTO) இந்திய விவசாயிகளை அழிக்கும் வகையில் உள்ளது. அதை எதிர்த்து பல காலங்களாக போராடி வருகிறோம். ஆத்ம நிர்பார் பாரத் என்று பேசும் மத்திய அரசு இந்த ஒப்பந்தம் வாயிலாக வெளிநாடுகளிலிருந்து அதிகளவு சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து, இந்திய விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் வேளாண் தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர்,” என்று அவர்கள் கூறினர்.
கங்கனா ரனாவத் கால் பதிக்க முடியாது: இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, “நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தொடர்ந்து விவசாயிகளை அவமதிக்கிறார். விவசாயிகள் போரட்டத்துக்கு வெளிநாடு சதி இருப்பதாக குற்றம்சுமத்தி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்திய பாஜக அரசு கங்கனா ரனாவத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதே நிலை தொடர்ந்தால் கங்கனா ரனாவத் இந்தியாவில் எங்கும் கால் பதிக்க அனுமதிக்க மாட்டோம். அவரது உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தும் நிலை ஏற்படும். கங்கனாவை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளின் கோபத்தை கட்டுபடுத்த முடியாது,” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT