Published : 27 Aug 2024 08:33 PM
Last Updated : 27 Aug 2024 08:33 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் சர்ச்சைகள்: விஐபிக்கள் தரிசனத்தில் நடைமுறை என்ன?

மதுரை: நாட்டின் முக்கிய ஆன்மிக ஸ்தலங்களில் முக்கியமானதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. அதனால், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் இக்கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.

இக்கோயிலுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கோயிலில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கோயிலில் நடக்கும் குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு என்றே, ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மீனாட்சியம்மன் கோயில் பெயரில் தனி போலீஸ் நிலையம் செயல்படுகிறது.

பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், கையில் செல்போன்கள், செறுப்புகள் எடுத்து செல்வதற்கு அனுமதியில்லை. செல்போன்களையும், செருப்புகளையும், ஒவ்வொரு கோபுர வாசலில் அமைந்துள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும். மீனாட்சியம்மன் கோயில், தினமும் 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம். கோயில் நிர்வாகிகள் சார்பில் முக்கிய பிரமுகர்களுக்கு கோயில் தரிசனம் செய்வதற்கு ‘பாஸ்’ (அனுமதி சீட்டு) வழங்கப்படுகிறது.

இந்த பாஸ் வைத்திருப்பவர்களுக்கு வரிசையில் நிற்காமல் கோயில் ஊழியர்கள் அழைத்து சென்று சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். மற்றவர்கள், இலவச தரிசனம் வரிசை மற்றும் கட்டண தரிசனம் வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்யலாம்.

இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் 10 முதல் 15 முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். விழாக் காலங்கள், முக்கிய முகூர்த்த நாட்களில் இந்த எண்ணிக்கை கூடலாம். அப்படி வரக்கூடியவர்கள், முன்கூட்டிய கோயில் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அனுகி பாஸ் அல்லது தகவல் தெரிவிக்க வேண்டும்.

சில நேரங்களில் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், இந்து அறநிலையத் துறை அமைச்சர் அலுவலகம், பிற அமைச்சர்கள் அலுவலகங்களில் இருந்து விஐபிகள் தரிசனத்திற்கு சிபாரிசுகள் வரும். இவர்கள் அனைவருடன் ஒரு ஊழியரை உடன் அனுப்பி விரைவாக தரினசம் செய்து அனுப்பி வைக்கப்படுவார்கள். காவல் துறையை பொறுத்தவரையில், அச்சுறுத்தல் உள்ள முக்கிய பிரமுகர்கள் வருகையை கோயில் பாதுகாப்பு போலீஸாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பார்கள். அவர்களை போலீஸார் பாதுகாப்பாக அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்து, பாதுகாப்பாக அனுப்பி வைப்பார்கள்.

துறை சார்ந்த உயர் அதிகாரிகள் வரும்போது அவர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய ஏற்பாடு செய்வார்கள். நேற்று முன்தினம் நடிகை நமீதா, வரும் தகவல் கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்படவில்லை. உள்ளூர் அமைப்பை சேந்தவர்கள், ஏதோ ஒரு வகையில் கோயில் வளாகத்திற்குள் வந்துவிட்டார்கள். அவர்களிடம் முறையான விஐபி தரினசம் பாஸ், அனுமதி எதுவும் இல்லை. அதனால், அவர்களிடம் கோயில் நிர்வாகம் சில விவரங்களை கேட்டுள்ளனர்.

அதற்கு, நடிகை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து நான் எல்லோரும் அறிந்த விஐபி, தன்னை எப்படி தடுக்கலாம் என வாக்குவாதம் செய்துள்ளார். அப்படியிருந்தும், அவரை விஐபி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம். இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் எத்தனை விஐபிகள் தரினசத்திற்கு வந்தார்கள், அவர்கள் விவரங்களையும் அனுப்பி வைக்க வேண்டிய உள்ளது.

அதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தான் சில நேரங்களில் கோயில் ஊழியர்கள், போலீஸார், இப்படி முறையாக பாஸ் பெற்று வராமல் வருகிறவர்களிடம் விவரங்களை கேட்டு விசாரிக்கும் போது அவர்கள் அதிருப்தியடைந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறார்கள். விவரம் தெரியாமல் இதுபோல் விஐபி தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களையும் கூட, விவரங்களை கேட்டு, தரினசத்திற்கு ஏற்பாடு செய்யதான் செய்கிறோம்" என்று கோயில் அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x