Published : 27 Aug 2024 06:25 PM
Last Updated : 27 Aug 2024 06:25 PM
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது ரயில் பாதை பணி அக்டோபரில் முடிக்கப்பட்டு தர ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பணியாளர் நலன் அதிகாரி கே.ஹரிகிருஷ்ணன், முதன்மை நிதி ஆலோசகர் மாலாபிகா கோஷ் மோகன், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி செந்தமிழ் செல்வன் ஆகியோர் இன்று (ஆக.27) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு கடந்த 24-ம் தேதி ஒப்புதல் கொடுத்துள்ளது.
இந்த ஓய்வூதியத் திட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் உள்பட 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இத்திட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம், உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் மொத்தத் தொகைப் பலன்களைப் பணியாளர்கள் பெறுவர்.
தற்போது, தெற்கு ரயில்வேயில் மொத்தம் 81,311 பணியாளர்கள் உள்ளனர். இதில், 18,605 பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். தெற்கு ரயில்வேயில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில், 62,706 ஊழியர்கள், அதிகாரிகள் தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளனர். இந்த ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கான விருப்பத்தைப் பயன்படுத்துவதற்குத் தகுதி பெறுவார்கள்.ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு 25 ஆண்டு பணிசேவை முடிந்து, ஓய்வுபெறும்போது அவர்களுக்கு கடைசி 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில், 50 சதவீதம் ஓய்வூதியமாகத் தரப்படும்.
இத்திட்டத்தில் உள்ளோர் ஓய்வு பெற்று காலமானால் அவர்களின் குடும்பத்தாருக்கு ஓய்வூதியத்தில், 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக தரப்படும். இத்திட்டத்தில் ஒருவர் 10 ஆண்டுகளில் ஓய்வுபெற்றால், அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியமாக கிடைக்கும். புதிய ஓய்வூதியத்தை விட, இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு சலுகைகள் உள்ளன. அதனால் இத்திட்டத்தில் சேர பணியாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையால், பணி தாமதம் ஏற்பட்டது. அனைத்து பணிகளையும் அக்டோபரில் முடிந்து, தர ஆய்வு மேற்கொள்ளப்படும். பெரம்பூரில் 4-வது ரயில் முனையம் அமைக்க தற்போது, சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஓராண்டு ஆகும்.
அதன்பிறகு, அடுத்த கட்ட பணி தொடங்குவது தொடர்பாக திட்டமிடப்படும். சென்னை - நாகர்கோவில் இடையேயும், மதுரை - பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்,” என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT