Last Updated : 27 Aug, 2024 06:24 PM

 

Published : 27 Aug 2024 06:24 PM
Last Updated : 27 Aug 2024 06:24 PM

கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை அறிய 'கூட்டுறவு’ செயலி சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்

அமைச்சர் பெரியகருப்பன் | கோப்புப் படம்.

சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், கூட்டுறவுத் துறை ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்துகொள்ளும் வகையில், 'கூட்டுறவு' என்ற செயலியை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசியது: ''மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக தமிழ் மகள் தொடர் வைப்புத் திட்டம் மூலம் 8,19,419 சேமிப்புக் கணக்குகள் தொங்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிப்பின்படி, கூட்டுறவு அமைப்புகள் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் மற்றும் தொழில்முனைவோர் மூலம் 500 முதல்வர் மருந்தகங்களும் திறக்கப்படவுள்ளது. இம் மருந்தகங்களுக்கு அரசு மானியமாக ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமுக்கு ரூ.5 ஆயிரம் வரை நகைக்கடன் 9 முதல் 10.50 சதவீதம் வரை வட்டியில் வழங்கப்படுகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2 லட்சமும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையும் 12 சதவீத வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பல்வேறு வகை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கும் சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, 'கூட்டுறவு' (Kooturavu) என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகைக்கடன் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளவும், பொதுமக்கள் தங்களது கடன் தேவைக்கேற்ப, கடன் விண்ணப்பத்தை இணைய வழியே சமர்ப்பித்திடும் வகையிலும் இச்செயலியில் கடன் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயலி மூலம், பயிர் கடன், மீன் வளர்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் இதர வகைக் கடன்களை கடன் விண்ணப்பம் என்ற பகுதியில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இ-வாடகை, தேவையான வேளாண் உபகரணங்களை குறைந்த வாடகைக்கு எடுத்து பயன்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இச்செயலியில் கிடங்கு என்ற பகுதியில், தமிழகத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் கிடங்குகளின் முகவரி மற்றும் அலைபேசி எண் விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய உறுப்பினர்கள் கிடங்கு வசதியினை குறைந்த வாடகையில் பெற்று பயன் பெறலாம்'' இவ்வாறு என்று அவர் பேசினார். கூட்டத்தில், துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x