Published : 27 Aug 2024 03:37 PM
Last Updated : 27 Aug 2024 03:37 PM

“எனக்கு 70 வயதாகிறது”- தயாநிதி மாறன் அவதூறு வழக்கில் ஆஜராக விலக்கு கோரி இபிஎஸ் மனு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “எனக்கு 70 வயதாகி விட்டது. உடல்நலக்குறைவு உள்ளது. எனவே, எனது வயது, நிரந்தர குடியுரிமை, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்,” எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதியன்று சென்னை புரசைவாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 75 சதவீத தொகையை தொகுதிக்கு செலவழிக்கவில்லை, என குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், “தேர்தல் ஆதாயத்துக்காக பழனிசாமி தனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை. மத்திய சென்னைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 17 கோடியில் ரூ. 17 லட்சம் மட்டுமே மிச்சம் உள்ளது. 95 சதவீதத்துக்கும் மேலான தொகையை தொகுதி மேம்பாட்டுக்காக செலவழித்துள்ளேன். என்னென்ன பணிகள் செய்துள்ளேன் என்பதையும் பட்டியலிட்டுள்ளேன்.
இந்த நிலையில், அரசியல் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜரானார். அவரது சா்ர்பில் ஆஜரான வழக்கறிஞர் சி. அய்யப்பராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், “தனக்கு 70 வயதாகி விட்டதால் மூத்த குடிமகன் என்ற முறையிலும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையிலும், முன்னாள் முதல்வர் என்ற முறையிலும் அடுத்தமுறை வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்.

நீதித்துறையின் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். உடல்நலக்கோளாறு காரணமாக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். இந்த வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் இல்லை. எனவே, எனது வயது, நிரந்தர குடியுரிமை, உடல் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x