Published : 27 Aug 2024 03:29 PM
Last Updated : 27 Aug 2024 03:29 PM
சென்னை: சென்னை விமான நிலையத்தின் 2 ஓடுபாதைகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுவதால், இரண்டாவது ஓடுபாதையில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் (ரன்வே) செயல்பாட்டில் உள்ளன. முதல் ரன்வே 3.66 கிலோ மீட்டர் நீளமும், இரண்டாவது ரன்வே 2.89 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. முதல் ரன்வே பிரதான ரன்வே ஆகும். இதில், பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்கி, புறப்படுகின்றன. இரண்டாவது ரன்வேயில் ஏடிஆர் எனப்படும் 76 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் மற்றும் தனியாரின் தனி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த இரண்டு ரன்வேக்களையும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை, இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டது. அதற்கு வசதியாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள், ஒரு ரன்வேயில் இருந்து மற்றொரு ரன்வேக்கு செல்ல, டாக்ஸி வே என்ற இணைப்புப் பாதைகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டாக்ஸி வே ‘பி’ என்ற பிராவோ முதல் ரன்வேக்கு, நேராக செல்லாமல் வளைந்து செல்லும் வகையில் இருந்தது.
இதனால் தரையிறங்கும் மற்றும் புறப்படும் விமானங்கள் டாக்ஸி வேயில் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த டாக்ஸிவே பி-யை, நேர்படுத்தும் பணிகள் நடைபெற்றன. அந்த பணிகள் நிறைவடைந்து, தற்போது சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில், இரண்டு ரன்வேக்களும் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம், இரண்டாவது ரன்வேயில் விமான சேவைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் விமான நிலையத்தின் இரண்டாவது ரன்வேயில் 615 விமானங்கள் இயக்கப்பட்டன. அதுவே கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டாவது ரன்வேயில் இயக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கெனவே ஒரு மணி நேரத்தில் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு மணி நேரத்துக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானங்களின் இயக்க எண்ணிக்கை அதிகரிப்பதோடு, விமானங்கள் புறப்பாடு, தரை இறங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment