Published : 27 Aug 2024 02:56 PM
Last Updated : 27 Aug 2024 02:56 PM

மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழகம முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (ஆக.27) எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், “IND-TN-10-MM-34 என்ற பதிவெண் கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 8 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் ஆக.26 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 116 இந்திய மீனவர்களும், 184 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மீனவர்கள் இதுபோன்று தொடர்ச்சியாக கைது செய்யப்படும் சம்பவங்கள், மீனவர்களின் குடும்பத்தினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பரப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களை மட்டுமல்லாமல், அவர்களை நம்பி வாழும் அவர்களது குடும்பத்தினரின் நல்வாழ்வையும் பாதிக்கிறது.

எனவே, இலங்கைக் காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும், இந்தியப் படகுகளையும் விரைவாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x