Published : 27 Aug 2024 01:38 PM
Last Updated : 27 Aug 2024 01:38 PM

ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.20 லட்சம் பணப்பலன் பாக்கி: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் தழுவிய மறியல்

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 9 இடங்களில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதன் பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் காலை முதலே ஏராளமான ஓய்வூதியர்கள் திரண்டனர். அங்குள்ள மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் இருந்து அவர்கள் ஊர்வலமாக சென்றபோது, அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலை இறுதி வரை வந்த அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் சாலையில் ஓய்வூதியர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சாலையின் மறுபுறத்துக்குச் சென்ற போராட்டக்காரர்கள் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: “கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை வழங்கவில்லை. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றோம். ஆனால், அரசு மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கிறது. தற்போது பல்வேறு குளறுபடிகளுக்கு இடையே மாதந்தோறும் 5ம் தேதி ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.

வழக்கமாக காலை 11 மணிக்கு வர வேண்டிய ஓய்வூதியம், மாலை, இரவு என வெவ்வேறு நேரத்தில் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. ஓய்வூதியம் வழங்குவதில் நிர்வாகத்தில் ஒரு அக்கறையற்ற போக்கு நிலவுகிறது. 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் தற்போது வரை ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் நிலுவையில் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.20 லட்சம் வழங்க வேண்டியிருக்கிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.7,850 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால், போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு ரூ.3,050 என்பதே குறைந்தபட்ச ஓய்வூதியமாக இருக்கிறது. இவ்வாறு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் மருத்துப் படியும் வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கர்சன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x