Last Updated : 27 Aug, 2024 01:26 PM

1  

Published : 27 Aug 2024 01:26 PM
Last Updated : 27 Aug 2024 01:26 PM

வெளியூரைச் சேர்ந்த பட்டியலின மக்களுக்கு புதுச்சேரியில் இடஒதுக்கீடு மறுப்பு: ஆளுநரிடம் எம்.பி ரவிக்குமார் மனு

புதுச்சேரி: புதுச்சேரியில், பட்டியலின மக்களை உள்ளூர் - வெளியூர் எனப் பிரித்து வெளியூர் மக்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என ஆளுநரிடம் விசிக பொதுச்செயலாளரான ரவிக்குமார் எம்.பி மனு அளித்துள்ளார்.

விசிக பொதுச்செயலரும் விழுப்புரம் எம்.பி-யுமான ரவிக்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி ராஜ்நிவாஸில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் மனு ஒன்றையும் ரவிக்குமார் அளித்தார்.

பின்னர் அதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ரவிக்குமார் கூறியதாவது: “புதுச்சேரிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள துணைநிலை ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். மிக திறமை வாய்ந்த அதிகாரி. பிரதமர் மோடியுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். நிச்சயமாக புதுச்சேரி வளர்ச்சிக்கு இவர் உதவுவார். புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ள பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக இன்று ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.

பட்டியலின மக்களை உள்ளூர்வாசிகள், வெளியூர்வாசிகள் என இரண்டாகப் பிரித்து வெளியூரில் இருந்து வந்தோருக்கு இடஒதுக்கீடு இல்லை என அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை முன்பிருந்த புதுச்சேரி காங்கிரஸ் அரசு எடுத்தது. அதன் அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியூர்வாசிகளுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம் என 2014-ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான புதுச்சேரி அரசின் உத்தரவுகளை ரத்து செய்தது. ஆனால், அதன் பிறகும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைக்கு வரவில்லை.

2001-க்கு பிறகு வந்த பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் இந்த யூனியன் பிரதேச குடிமக்களாகக் கருதி முன்பிருந்த காங்கிரஸ் அரசும் தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் அரசும் இடஒதுக்கீட்டை வழங்கி வருகின்றன. ஆனால், அந்தக் கருணையைப் பட்டியலின மக்களுக்கு காட்ட மறுக்கிறார்கள். ஆகவே இப்பிரச்சினையில் ஆளுநர் தலையிட்டு அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் அதை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.

ஜிப்மர் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை பயன்படுத்தி ஜிப்மர் மருத்துவமனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம். இது புதுச்சேரி மற்றும் தமிழகத்துக்கு பயன்தரும் என்று தெரிவித்துள்ளோம். அதையும் அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது விசிக-வின் புதுச்சேரி மாநில முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x