Published : 27 Aug 2024 12:29 PM
Last Updated : 27 Aug 2024 12:29 PM
நாகை: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கத்தி முனையில் தாக்குதல் நடத்தி ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்ஜின் மற்றும் மீன்பிடி வலைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அதே ஊரைச் சேர்ந்த தங்கதுரை என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் தங்கதுரை, அவரது மகன் மணிகண்டன் மற்றும் கங்காதரன் ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று (திங்கள்கிழமை) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கோடியக்கரை அருகே வலை விரித்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மூன்று அதிவேக படகுகளில் அங்கு வந்த 10 இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் கத்தி, ரப்பர் தடியுடன் படகில் ஏறிய இலங்கை மீனவர்கள், நாகை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்துடன் படகில் இருந்த சுசுகி இன்ஜின், 500 கிலோ வலை, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீனவரின் இடுப்பில் இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு என ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தில் செருதூர் மீனவர்கள் மூவருக்கும் கை கால்களில் வெட்டு காயங்களும், உடலில் ஊமைக்காயங்களும் ஏற்பட்டன. இதையடுத்து படகில் இருந்த மற்றொரு இன்ஜினை இயக்கி பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கரை வந்து சேர்ந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள இன்ஜின் மற்றும் வலைகளை இலங்கை மீனவர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் நாகை மீனவளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவம், நாகை மாவட்ட மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT