Last Updated : 27 Aug, 2024 12:13 PM

1  

Published : 27 Aug 2024 12:13 PM
Last Updated : 27 Aug 2024 12:13 PM

அண்ணாமலைக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் அதிமுக மருத்துவ அணி செயலாளர் புகார்

அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன்

மதுரை: அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று (திங்கள்கிழ்மை) புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். ஆகவே, அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.

அப்போது அண்ணாமலை, “பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் ஆகியிருக்கிறார். எனவே பழனிசாமி என்னை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்.” எனப் பேசியிருந்தார்.

இதனை அதிமுகவினர் பலரும் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மருத்துவ அணியின் மாநில செயலாளர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக இன்று (திங்கள்கிழ்மை) புகார் ஒன்றை அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x