Published : 27 Aug 2024 06:13 AM
Last Updated : 27 Aug 2024 06:13 AM

அரசு வேலையை எதிர்பார்க்கும் வ.உ.சிதம்பரனாரின் குடும்ப வாரிசு

திருவாரூரில் வசித்து வரும் வஉசி.யின் குடும்பத்தைச் சேர்ந்த நெல்லையப்பன், அவரது மனைவி ராணி, மகள் சாய் லட்சுமி ஆகியோர்.

திருவாரூர்: நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாருக்கு 4 மகன்கள், 4 மகள்கள். இதில் ஒரு மகளான ஆனந்தவல்லியின் மகள்வழி பேத்தியின் மகன் நெல்லையப்பன் (64). தூத்துக்குடியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார்.இவருக்கு, 2011-ம் ஆண்டு தமிழ்வளர்ச்சித் துறையில் சிறப்பு நேர்வு அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.

தனது 51-வது வயதில் பணியில்சேர்ந்த இவர், 9 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்து, 2020-ம் ஆண்டு பணிஓய்வு பெற்றார். இவருக்கு ஓய்வூதியமும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப் பட்டு வரும் இவர், தற்போது பேக்கரி ஒன்றில் தினக்கூலி பணியாளராக வேலை செய்து வருகிறார்.

திருவாரூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 முறை வருகை தந்தபோதும், அவரை நேரில் சந்தித்த நெல்லையப்பன், தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதாகவும், பொறியியல்பட்டதாரியான தனது மகள் சாய் லட்சுமிக்கு அரசு வேலைவழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இந்தியகம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்இரா.முத்தரசனும் இவரது கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இந்தக் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அளவில் விசாரணை நடைபெற்று, தொடர் நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளது. இதுதொடர்பாக நெல்லையப்பன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

எனக்கு அரசு வேலை வழங்கினாலும் குறைந்த ஊதியத்தில் 9 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தேன். பணி ஓய்வுக்குப் பின் மிகுந்த பொருளாதாரக் கஷ்டத்தில் உள்ளேன். இதனால், பேக்கரி கடையில் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணியாற்றி வருகிறேன். குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்த நிலையில், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தனது பொறியியல் கல்லூரியில், எனது மகள் சாய் லட்சுமிக்கு இடம் கொடுத்து படிக்க வைத்தார்.

தற்போது, எனது மகளுக்கு அரசு வேலை கேட்டு அணுகினால், சுதந்திரப்போராட்டத் தியாகிகளின் நேரடி வாரிசுகளுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும் என்கின்றனர். எனது கோரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் தெரிவித்தேன். அவர் பரிசீலிப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து, என்னிடம் இருந்த சில ஆவணங்களை அதிகாரிகள் கேட்டுப் பெற்றனர். இருப்பினும் கோரிக்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது.

வரும் செப்டம்பர் 5-ம் தேதி வஉசி.யின் 153-வது பிறந்த தினம் வர உள்ளது. அன்றைய தினம் எனது குடும்பத்துக்கு ஒரு நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x