Published : 25 Jun 2018 08:47 AM
Last Updated : 25 Jun 2018 08:47 AM
தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை பெய்த நிலையில், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வார்டுகளிலும், கொசு உற்பத்தி மூலங்களை அகற்றி, கொசுமருந்து தெளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்பணியில் 3,230 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிய கட்டுமானப் பகுதிகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசுக் கட்டிடங்கள், தனியார் காலி மனைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, குப்பைகளை அகற்றி வருகிறோம்.
டயர்கள், டின்கள் போன்றவற்றை ஏற்கெனவே அகற்றிவிட்டோம். மழைக் காலங்களில் வீடுகளைச் சுற்றியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க காரணமாகிறது.
எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டு மாநகராட்சி குப்பை வாகனங்களில் மட்டுமே போட வேண்டும். இதன் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை பெருமளவில் தவிர்க்க முடியும் என்றனர்.
கொசுக்களை மலடாக்கும் திட்டம்
கொசுக்களால் பரப்பப்படும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா, யானைக்கால் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்த, அதிக பொருட்செலவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பாக்டீரியாக்களைப் புகுத்தி மலடாக மாற்றப்பட்ட கொசுக்களை உருவாக்கி வெளியில் விடும் நடைமுறை வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிறது.
அதன் மூலம், அடுத்த தலைமுறை கொசுக்கள் உருவாவது தடுக்கப்பட்டு, அவை முற்றிலும் ஒழிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக தற்போது வால்பாக்சியா என்ற பாக்டீரியாவை கொசுக்களுக் குள் செலுத்தி, இனப்பெருக்கம் செய்து, அந்த கொசுக்களை வெளியில் விடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறை மூலம், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை மனிதர்களுக்கோ, மற்ற கொசுக்களுக்கோ பரப்பும் திறனை கொசுக்கள் இழக்கின்றன. இத்திட்டம் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளில் சோதனை முறையில் செயல்படுத்தப் பட்டுள்ளது. அதன் மூலம், இலங்கையில் கொசுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. அதே போன்று சென்னையில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது அதிக பொருட்செலவு மிகுந்தது. அதற்கு உயர் ஆய்வுக் கூடங்கள் தேவை. அதனால் அத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT