Published : 26 Aug 2024 10:31 PM
Last Updated : 26 Aug 2024 10:31 PM
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சொன்னதன் விளைவாகத்தான் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதாக முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “2026-ம் ஆண்டு யார் யார் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாது. கூட்டணிகள் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. இப்போது விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு கூட காரணம் ராகுல் காந்திதான்.
முன்பு ஒருமுறை நடிகர் விஜய் ராகுல் காந்தியை நேரில் சந்திக்கச் சென்றபோது காங்கிரஸ் கட்சியில் ஒரு பொறுப்புதான் முதலில் அவர் கேட்டார். ஆனால் ராகுல் காந்தியோ, ‘நீங்கள் தமிழ்நாட்டில் பெரிய ஸ்டார் ஆக இருக்கிறீர்கள். நீங்களே தனியாக கட்சி ஆரம்பித்து ஆவர்த்தனம் செய்யலாம். எதற்காக இன்னொரு கட்சியில் பொறுப்பு?’ என்று சொல்லி அவரை அனுப்பினார்.
அதன் விளைவாகத்தான் இன்று விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நான் அப்போது காங்கிரஸில் இருந்ததால் இந்த உண்மை எனக்கு தெரியும். இயற்கையாகவே விஜய்க்கும், காங்கிரஸ்க்கும் ஒரு புரிதல் இருக்கத்தான் செய்யும். விஜய் பிடிவாதமாக அரசியலில் தொடரவேண்டும். இனிமேல்தான் அவருடைய கொள்கை என்ன, அவர் யாருடன் இணைந்து பயணிக்கப் போகிறார்? யாரை எதிர்க்கப் போகிறார்? என்பதெல்லாம் தெரிய வரும்” இவ்வாறு விஜயதரணி தெரிவித்தார்.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி டெல்லியில் கடந்த பிப்ரவரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தது தமிழக காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது என்று தனது விலகலுக்கான காரணங்களை விஜயதரணி அடுக்கியிருந்தார். தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT