Last Updated : 26 Aug, 2024 08:41 PM

3  

Published : 26 Aug 2024 08:41 PM
Last Updated : 26 Aug 2024 08:41 PM

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை ‘கட்டுப்படுத்த’ பார்களுக்கு கோவை போலீஸ் புதிய அறிவுரை

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகம்

கோவை: மது அருந்த சொந்தமாக வாகனம் ஓட்டி வருவோர் திரும்பிச் செல்ல மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என மதுபானக் கூடங்களுக்கு கோவை காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையினர் இன்று (ஆக.26) வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 இடங்களில் மாநகரில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், 126 இருசக்கர வாகன ஓட்டிகள், 52 நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என மொத்தம் 178 பேர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டுவதை தடுப்பது தொடர்பாக, முன்னரே கோவை மாநகரில் உள்ள அனைத்து வகை மதுபானக்கூட உரிமையாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவர்களது, மதுக்கூடங்களுக்கு சொந்தமாக வாகனம் ஓட்டி வருபவர்கள் திரும்ப செல்லும் பொழுது மது அருந்தியிருந்தால், அவர்கள் வாகனத்தை இயக்காமல் இருக்க தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் மதுக்கூட உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தங்களது மதுக் கூடத்துக்கு மது அருந்த வருவோர், சொந்த வாகனத்தில் வந்தால் அவர் ஓட்டுநருடன் வர வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மது அருந்திய ஒருவர், ஓட்டுநர் இல்லாத சூழலில், அவர் பாதுகாப்பாக வீட்டுக்குச் செல்ல, ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். அல்லது நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநர் ஒருவரை தொடர்புடைய மதுக்கூடம் சார்பில் ஏற்பாடு செய்து, மது அருந்தியவரின் சொந்த வாகனத்திலேயே அவரை வீட்டில் விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மது அருந்த, மதுக்கூடங்களுக்கு வருபவர்கள், வேறு போதைப்பொருட்களை உபயோகிக்கின்றனரா என்பது குறித்தும், மது அருந்த வருபவர் உரிய வயது உடையவர்தானா என்பது குறித்தும் எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும். மது அருந்த வருபவர் நடவடிக்கை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தால், உடனடியாக காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

மதுக்கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய மதுபானக்கூட நிர்வாகம் தவறி, அதன் மூலம் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தொடர்புடைய மதுக்கூடத்தின் மீது சட்டப்படி நடவடிக்கையுடன், மதுக்கூட உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, முதல்முறை பிடிபட்டால் வழக்குப் பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதேதவறை, 2-வது முறையாக செய்வோர் மீது ரூ.15 ஆயிரம் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதில் தொடர்புடையவர்களின் வாகனம் முடக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x