Last Updated : 26 Aug, 2024 08:29 PM

1  

Published : 26 Aug 2024 08:29 PM
Last Updated : 26 Aug 2024 08:29 PM

முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்கா பயணம்:  முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடு

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக.27) இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தொழிலை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான கொள்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுதவிர, மாநில அளவில் சிறிய அளவில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தி அதன் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் தமிழக அரசு நடத்தி, அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுதவிர, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான்,ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இவற்றின் பயனாக கடந்த 3 ஆணடுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.9.94 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்களை சந்திக்க அமெரிக்கா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை (ஆக.27) இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து முதல்வர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

இதை முன்னிட்டு ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்கா செல்வதையடுத்து, விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்ப உள்ளனர். அமெரிக்காவில் 17 நாட்கள் முதல்வர் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று செப்.12-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்ட இந்த பயணத்தில், நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், செப்.2-ம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். ஆக.28-ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தொழில் தொடங்க தமிழகம் வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆக.31-ம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அதன்பின், செப்.2-ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கியிருக்கும் அவர் முன்னணி நிறுவன முதலீட்டாளர்களை சந்திக்கிறார். குறிப்பாக அங்கு, பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். மேலும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உயர் பொறுப்பில் இருப்பவர்களையும் சந்திக்க உள்ளார். இவற்றுக்கிடையில் செப்.7-ம் தேதி அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே அமெரிக்கா சென்றுள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் மேற்கொண்டுள்ளனர். சிகாகோவிலும் பல்வேறு முதலீடுகள் தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்பின் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் செப்.12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x