Published : 26 Aug 2024 06:39 PM
Last Updated : 26 Aug 2024 06:39 PM

“துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்“ - சீமான் அடுக்கும் காரணங்கள்

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

திருச்சி: அனுபவமும், கட்சிக்கு விசுவாசமாகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், திமுக தலைமைக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்திருந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 100 வாக்காளருக்கு ஒரு குழு வீதம் தேர்தல் பணியை பிரித்துச் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். கட்சிக்கு வேண்டும் என்பவர்கள் தவறு செய்தால் விளக்கம் கேட்கிறோம். வேண்டாதவர்களை விலக்கி வைக்கிறோம்.

பழநியில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது தீர்மானங்களே அல்ல. தமிழ் வளர்ப்பதாக சொல்லிக் கொண்டு வடமொழி சொற்கள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. வாக்கு அரசியலுக்காக ஏதேதோ செய்கிறார்கள். திருக்குறளை முழுமையாக பள்ளிகளில் கொண்டுபோய் சேர்க்கவில்லை. தமிழை கற்பிக்க போதுமான பள்ளிகள் இல்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிறீர்கள். ஆனால், வழிபாட்டில் தமிழ் இல்லை. தமிழில் அர்ச்சனை வேண்டும். அதை ஏன் திமுக அரசு இதுவரை செய்யவில்லை?

எங்கள் குடும்பத்தையும்தான் சமூக ஊடகங்களில் கேவலமாக எழுதுகின்றனர். கன்னியாகுமரி, தென்காசி, விக்கிரவாண்டி என எங்கு குற்றம் நடந்தாலும் சம்பந்தபட்ட மாவட்டத்தில் வழக்குப் போடாமல் திருச்சிக்கு அழைத்து வந்து வழக்குப் போட்டு கைது செய்கிறார்கள். திருச்சி எஸ்.பி., தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். நான் அவரைப்போல் ஊதியத்துக்காக பணி செய்யாமல், கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். நான் உங்கள் சந்ததிக்கும் சேர்த்துத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

டி.என்.பி.எஸ்.சி தலைவராக தமிழரான சைலேந்திரபாபுவை நியமிக்காமல், பிரபாகரை நியமித்தது எப்படி? பிரபாகர் கோவையில் நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக களத்தில் பணியாற்றியவர். பாஜகவுக்கு பணியாற்றியதற்கு கொடுத்த பரிசா டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி? மாநிலத்தை ஆள்வது திமுகவா? பாஜகவா? திமுகவும், பாஜகவும் ஒரே கட்சிதான். இவர்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்? வரவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான பணியில் நாதக ஈடுபட்டுள்ளது.

50 தொகுதிகளுக்கு ஏற்கெனவே வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டோம். தவெக-வுடன் கூட்டணி உண்டா இல்லையா என காலம் தான் தீர்மானிக்கும். தனித்து முடிவெடுக்கும் ஆற்றல் விஜய்க்கு உள்ளது. அது குறித்து தம்பி விஜய்தான் முடிவு செய்து அறிவிக்க வேண்டும். ஒரு தம்பிக்கு அண்ணன் சொல்ல வேண்டியதை நான் விஜய்யிடம் தெரிவித்துள்ளேன். அது குறித்து பொதுவெளியில் கூறுவது சரியாக இருக்காது. முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகிறேன்.

தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதாகவும் தொழில்துறை அமைச்சர் கூறுகிறார். இது நம்பும்படி உள்ளதா? அப்படி நடந்ததற்கான அறிகுறி ஏதும் தெரிகிறதா? போகிறபோக்கில் பொய் சொல்லிவிட்டுப் போகிறார்கள். உண்மையைப் பேசுங்கள்.

மிகவும் அனுபவம் வாய்ந்த, கட்சிக்கு விசுவாசமான நபரான துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம். இது மூத்த தலைவரான துரைமுருகனுக்கு கொடுக்கும் அங்கீகாரமாக இருக்கும். எடப்பாடி பழனிசாமி இப்போது உள்ள அரசியல்வாதிகளிலேயே மிகவும் புத்திசாலியானவர். அவரைப் போய் தற்குறி எனப் பேசுவது தவறு. படித்தவரான அண்ணாமலை அப்படி பேசக் கூடாது. தனிநபர் விமரிசனம், அநாகரிக பேச்சுகளை எல்லோரும் சேர்ந்து குறைக்க வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x