Last Updated : 26 Aug, 2024 05:02 PM

28  

Published : 26 Aug 2024 05:02 PM
Last Updated : 26 Aug 2024 05:02 PM

“திமுகவில் துரைமுருகனுக்கு உரிய அங்கீகாரம் இல்லை!” - ரஜினி பேச்சை முன்வைத்து தமிழிசை கருத்து

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

சென்னை: “மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கிவிட்டார்,” என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஆக.26) சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கிருஷ்ணன் இந்த உலகத்தில் தர்மத்தை நிலைநாட்டியவர். கீதையை நம் அனைவருக்கும் அருளியவர். கீதை வழி சென்றால், அந்தப் பாதை சரியாக இருக்கும் என நமக்கெல்லாம் உணர்த்தியவர். அதனால், கிருஷ்ணர் பிறந்த நாளில், கோபாலபுரத்தில் உள்ள கோபாலை தரிசிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையில் மத, இன, சாதி பாகுபாடு பார்க்கவில்லை என்றால், முதல்வர் கிருஷ்ண ஜெய்ந்தி வாழ்த்து சொல்லியிருக்க வேண்டும். முதல்வரின் வாழ்த்தை அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால், வரவில்லை. அப்படியென்றால், அவர்கள் வேறுபாடு பார்க்கிறார்கள் என்று தான் அர்த்தம். முதல்வர் தனது நம்பிக்கையை விட, பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றாலும், இறைவனின் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு.

கட்சியில் புதிதாக இணைந்த விஜயதரணி 6 மாதமாகியும் பதவி வழங்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அது இயல்பு தான். பாஜகவில் யாரெல்லாம் இணைந்திருக்கிறார்களோ, அவர்களுக்கான அங்கீகாரத்தை பாஜக நிச்சயம் வழங்கும். சில நேரத்தில் அங்கீகாரம் உடனே கிடைக்கும். சில நேரங்களில் தாமதமாகும். தாமதம் என்பதை விட சில காலங்கள் ஆகலாம். எனவே, விஜயதரணி நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.

திமுக, அதிமுக குறித்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. முடிவு எடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. தற்போது அண்ணாமலையின் கருத்துக்கு என்னால் மறுப்புப் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும். அதுதான் எங்களது ஒற்றைக் குறிக்கோள். வரும் செப்.25-ம் தேதி வரை எங்களது முழு கவனமும் உறுப்பினர் சேர்க்கையில் தான் இருக்கப்போகிறது.

மேடையில் துரைமுருகன் குறித்து பேசி, ரஜினிகாந்த் திமுகவில் புயலை உருவாக்கியிருக்கிறார். நான் சிறுவயதில் துரைமுருகன் வீட்டின் முன்பு மணலில் விளையாடி இருக்கிறேன். அவர் வீட்டின் முன்பு விளையாடிய நான், ஒரு கட்சியின் தலைவராகி, 2 மாநில ஆளுநராகி, தற்போது ஒரு கட்சியை பலப்படுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். மூத்த அரசியல்வாதியான துரைமுருகன் மாணவராக இருந்திருக்க முடியாது. கண்டிப்பாக ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால்தான் வாரிசு அரசியலை வேண்டாம் என்கிறோம். கட்சிக்காக உழைக்கும் திமுக தொண்டர்கள் இதை சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x