Last Updated : 26 Aug, 2024 04:00 PM

11  

Published : 26 Aug 2024 04:00 PM
Last Updated : 26 Aug 2024 04:00 PM

நமீதா பகிர்ந்த அதிருப்தியும், நிர்வாகத்தின் விளக்கமும் - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன?

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது, கோயில் அதிகாரிகள் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டதாக நடிகை நமீதா அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சுவாமி தரிசனத்துக்கு வருகின்றனர். பாதுகாப்பு கருதி, சுவாமி தரிசனம் செய்யும் வருபவர்களில் இந்து மதத்தினர் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு சுவாமி, அம்மன் சன்னிதிகளில் வழிபட அனுமதிக்கப்படுவர்.

இதன்படி, இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நடிகை நமீதா தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கோயில் அதிகாரி ஒருவர், நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி, “நீங்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவரா... அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?” என கேட்டுள்ளார். அதற்கு நமீதாவும் அவரது கணவரும் தாங்கள் பிறப்பிலேயே இந்து தான் எனவும், நாடு முழுவதிலும் பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி, “நீங்கள் குங்குமம் வைப்பீர்களா... அப்படியானால் குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் செல்லுங்கள்” என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பின், நமீதா நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை நமீதா, கணவருடன் தங்கிய ஓட்டலில் இருந்தவாறு வீடியோ பதிவு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மீனாட்சி அம்மன் கோயிலில் என்னை இந்து என்பதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என கோயில் அதிகாரி ஒருவர் கேட்டார். அவர் அப்படி கேட்டது அதிருப்தியாக உள்ளது. இது குறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பதி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களில் நான் சாமி தரிசனம் செய்திருக்கிறேன். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டார். பிறப்பிலிருந்தே நான் இந்து என தெரிந்தும் இது போன்று மத ரீதியான சான்றிதழ் கேட்பது என்ன மாதிரியான நடைமுறை என்று தெரியவில்லை” என கோயில் நிர்வாகத்துக்கு எதிராக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, “பொதுவாக முகக்கவசம் அணிந்து வருவோரிடம் விவரம் கேட்பது நடைமுறை. அதன்படி, முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வந்த நடிகையிடம் விவரம் கேட்கப்பட்டது. அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர் நடிகை என்பது முன்கூட்டியே எங்களுக்கு தெரியாது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x