Published : 26 Aug 2024 02:53 PM
Last Updated : 26 Aug 2024 02:53 PM
புதுச்சேரி: அரசு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி ஏராளமான பிசிஎஸ் அதிகாரிகள் பணியில் உள்ளனர். அவர்களில் குருப் ஏ, பி அதிகாரிகள் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணையும் சிலர் மீது நடந்து வருகிறது. சிலர் மீது துறை ரீதியான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கலாகியுள்ளன. இருப்பினும் பலர் மீது விசாரணை தொடங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஐஏஎஸ் அதிகாரியாக குஜராத்தில் 45 ஆண்டுகள் பணியாற்றியவர். ஓய்வுபெற்ற பிறகும் அவர் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றினார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது ஆளுநராக பொறுப் பேற்ற நிலையில் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார்.
இதுபற்றி புதுச்சேரி அரசு சார்பு செயலர் கண்ணன் அரசுத் துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: "புதுச்சேரி அரசுத் துறைகளில் பணிபுரியும் குருப் ஏ, பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளின் விவரத்தை ஆளுநருக்கு விரிவாக தெரிவிக்க தகவல்கள் தேவைப்படுகிறது. அத்தகையவர்கள் பற்றிய விவரங்களை வரும் 31ம் தேதிக்குள் மின்னஞ்சலில் (vigil@py.gov.in) அனுப்பி வைக்க வேண்டும். அதில் அதிகாரியின் பெயர் அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் இருந்தால் எதனால், அவ்வழக்கின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT