Published : 26 Aug 2024 02:32 PM
Last Updated : 26 Aug 2024 02:32 PM
கிருஷ்ணகிரி: “திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாததால் ரஜினிகாந்தை வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அசிங்கப்படுத்துகிறார்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடந்து முடிந்த அமைச்சர் எ.வ.வேலுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முதல்வரை புகழ்ந்து பேசியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தந்தையின் ஆட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்து அதன் பிறகு தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அடிப்படை உறுப்பினராக இருந்து படிப்படியாக உயர்ந்து இன்று பொதுச் செயலாளர் ஆகியுள்ளார் பழனிசாமி. இது ரஜினிகாந்துக்கு தெரியாது, ஆகவே, முதல்வரை புகழவேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் தான்தோன்றித்தனமாக பேசக் கூடாது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவில் உள்ள சீனியர்களை வெளியேற்ற முடியாத நிலையில், எ.வ.வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்தை அழைத்துப் பேசவிட்டு சீனியர்களை அவமானப்படுத்தி இருப்பதாக எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவுக்கு நீண்ட காலம் உழைத்த சீனியர் துரைமுருகன் உட்பட மூத்த தலைவர்கள் வெளியேற வேண்டும் என ரஜினிகாந்தை வைத்து அவமானப்படுத்தி உள்ளார் ஸ்டாலின். இதுபோன்று 2-ம் கட்ட தலைவர்களை அதிமுக ஒருபோதும் அவமானப்படுத்தியது கிடையாது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமைப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் அவர் மக்களைச் சந்திக்கவில்லை, மாறாக, ஊடகங்கள், பத்திரிகைகளை சந்தித்து அரசியல் செய்து வருகிறார். இந்த 3 ஆண்டுகளில் அவரது ஒவ்வொரு கருத்துகளும் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்துள்ளன. ஜெயலலிதாவை பற்றி கருத்து சொல்லும்போது, அண்ணாமலை ‘என்னுடைய மனைவியும் ஆளுமை மிக்கவர்’ என்று சொல்கிறார். பின்னர் கடுமையாக விமர்சனம் செய்கிறார், இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசக் கூடியவருக்கு ஒரு தலைவராக வர எந்தவிதமான தகுதியும் இல்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பல்வேறு செய்தியை அண்ணாமலை சொன்னார். இந்தத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக காணாமல் போகும் என்றார். இரண்டாவது பெரிய கட்சி பாஜக எனச் சொன்னார் அண்ணாமலை. ஆனால், ஓர் இடத்திலாவது பாஜக வெல்ல முடிந்ததா? கடந்த முறை வென்ற கன்னியாகுமரி தொகுதியில் கூட தோற்றதால் அண்ணாமலைக்கு பயம் வந்து வந்துவிட்டது. தலைமை பொறுப்பில் இருக்கும் வரை ஏதாவது ஒரு கருத்தை சொல்கிறார். நிச்சயமாக பாஜக தலைமை இதையெல்லாம் உணர்ந்து அவரை தலைமைப் பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள். அதற்காகத்தான் அவர் லண்டனுக்குப் படிக்கப் போவதாகச் சொல்லி வருகிறார்.
அதிமுக பொதுவாக அனைத்துத் தேர்தலிலும் போட்டியிடக் கூடிய கட்சி. கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்து இருக்கிறது. கூட்டணி இல்லாமலும் தேர்தலை சந்தித்திருக்கிறது. அந்தந்த காலத்துக்கு ஏற்றவாறு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் இயக்கம் அதிமுக. அதேபோலத்தான் 2024-லும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தோம். அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும்கூட 1 கோடி வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி என்ற நிலையில் இருக்கிறோம். வருகின்ற 2026 தேர்தலில் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு யார் யார் வருகிறார்கள் என பார்த்து கூட்டணி அமைத்து தேர்தல் வெற்றி பெறுவோம்.
தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களின் பிரதிநிதிகளாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆகவே, அதிமுகவில் எந்த பிளவுமும் இல்லை. அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் தான் இயங்குகிறது” என்று அவர் தெரிவித்தார். அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT