Published : 26 Aug 2024 11:54 AM
Last Updated : 26 Aug 2024 11:54 AM
சென்னை: “எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று கூறி ரஜினி பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்.
முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது அமைச்சர் துரைமுருகன், “மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்த நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை” என தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக இன்று (ஆக.26) காலை சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த், “அவர் (துரைமுருகன்) மிகப் பெரிய தலைவர், என் நீண்டகால நண்பர். அவர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. எங்கள் நட்பு நீடிக்கும்.” என்று கூறினார். தொடர்ந்து விஜய் கட்சி கொடி, பாடல் அறிமுகம் குறித்த கேள்விக்கு, “அவருக்கு வாழ்த்துகள்“ என்றார்.
ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு, “அதையேத்தான் நானும் சொல்கிறேன். எங்கள் நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாகப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும்போல் நண்பர்களாகவே இருப்போம்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார். இதன் மூலம் ரஜினி விமர்சனம் மற்றும் துரைமுருகன் பதிலடி தொடர்பான சர்ச்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது என்ன? முன்னதாக சனிக்கிழமை இரவு அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ’கலைஞர் எனும் தாய்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒரு பள்ளியில், ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. திமுகவில் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அசாதாரணமானவர்கள். அனைவரும் நல்ல 'ரேங்க்' வாங்கியவர்கள். ஆனாலும், வகுப்பறையை விட்டுச் செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள். கருணாநிதியுடன் இருந்தவர்களை சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு, அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா?
அதுவும், துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம்னு சொல்வார். நன்றாக இருக்கிறது என்று சந்தோஷம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா? என ஒன்றும் புரியாது. அந்தவகையில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைவணங்குகிறேன்” என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இந்நிலையில் ரஜினி பேச்சும், துரைமுருகன் எதிர்வினையும், நேற்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் அமைச்சர் உதயநிதி, “கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” எனப் பேசியது என அனைத்தும் தொடர்புபடுத்தப்பட்டு விவாதப் பொருளாகின. இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் “ரஜினியுடன் நட்பு தொடரும். நகைச்சுவைப் பேச்சை யாரும் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT