Published : 26 Aug 2024 05:00 AM
Last Updated : 26 Aug 2024 05:00 AM

மின் வாரியத்தை 3 ஆக பிரித்தாலும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும்: அரசிதழில் தகவல்

சென்னை: மின்வாரியம் எத்தனை நிறுவனமாக பிரிக்கப்பட்டாலும் ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என முத்தரப்பு ஒப்பந்தம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1995-ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘காட்’ ஒப்பந்தத்தின் ஒரு பிரிவுதான் மின்வாரிய மறுசீரமைப்பு. அதனடிப்படையில், கடந்த 2003-ல் புதியமின்சார சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அனைத்து மாநில மின்வாரியங்களும் கலைக்கப்பட்டு விநியோகம், உற்பத்தி என தனித்தனி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

இதன்படி, தமிழக மின்வாரியமும் டான்ஜெட்கோ, டான்டிரான்ஸ்கோ, தமிழ்நாடு மின்வாரியம் லிமிடெட் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, 2010 அக்.19-ம் தேதிஅரசாணை எண்.100-ஐ வெளியிட்டு மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை உறுதி செய்து கொள்ளும் வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு காரணங்களால் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக எரிசக்தித் துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், "மறுசீரமைப்பின்கீழ் மின்வாரியம் பல நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும் ஊழியர்கள் பணிநீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படாது.

ஊழியர் நலன்கள் பாதுகாக்கப் படும். ஊதிய உயர்வு, ஓய்வூதியம் போன்றவை வழங்கப்படும்.ஒப்பந்தப்படி பிரிக்கப்பட்ட நிறுவனங்கள் செயல்படாவிட்டால்,தமிழக அரசு அந்நிறுவனத்தை முறைப்படி செயல்பட அறிவுறுத்தும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர்தி.ஜெய்சங்கர் கூறும்போது, "பிரிக் கப்பட்ட நிறுவனத்தின் பணப்புழக்கம் அடிப்படையிலேயே ஊதியம் போன்றவை வழங்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனியார்மய நடவடிக்கை: ரூ.1.70 லட்சம் கோடி கடனில் இருக்கும் வாரியத்தில் எப்படி பணப்புழக்கம் இருக்கும். மேலும்,தனியாருக்கு தாரை வார்க்கமாட் டோம், பணப்பலனுக்கு அரசே பொறுப்பு போன்ற முக்கிய உத்தர வாதங்கள் தரப்படவில்லை.

ஊழியர் நலன் பாதுகாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அதற்கானவழிகள் எதுவும் வகுக்கப்பட வில்லை. எனவே தான் ஒப்பந்தத்திலும் சிஐடியு கையெழுத்திடவில்லை. மத்திய அரசின் அழுத்தத்தின்கீழ் தமிழக அரசு தொடர்ச்சியாக தனியார் மயத்துக்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x