Last Updated : 26 Aug, 2024 12:02 AM

 

Published : 26 Aug 2024 12:02 AM
Last Updated : 26 Aug 2024 12:02 AM

புதுச்சேரி ஈடன் கடற்கரையில் பொழுதை கழிக்க வருபவர்களுக்கு இனி நுழைவு கட்டணமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் கடற்கரையில் பொழுதை கழிக்க வருவோருக்கு இனி நுழைவுக்கட்டணமா என கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் அருகே உள்ள ஈடன் கடற்கரையில் காத்தாடி திருவிழா நடைபெற்றது. இதில் கடற்கரையை சுற்றி பார்க்க பொழுதைப் போக்க வருபவர்கள் அனைவருக்கும் கட்டாய நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

இது வரும் காலங்களில் கடற்கரைக்கு பொழுதை கழிக்க வருபவருக்கு நுழைவு கட்டணத்தை வாங்குவதற்கு முன்னோட்டமாக இருப்பதாக பலரும் குற்றச்சாட்டினர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், "ஈடன் கடற்கரைக்கு வருவோருக்கு ரூபாய் 100 நுழைவு கட்டணமாக வாங்கிய பின்னரே அனுமதி அளித்து வருகின்றனர். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் மாலை 3 முதல் 6 மணி வரை மட்டுமே குறிப்பிட்ட பகுதியில் காத்தாடி திருவிழா நடத்த அனுமதி வாங்கி உள்ளனர்.

ஆனால் இன்று கடற்கரைக்கு வருபவர் அனைவரிடமும் நுழைவு கட்டணம் வாங்கிய பின்னரே ஈடன் கடற்கரையில் தனியார் அமைப்பினர் மக்களை அனுமதித்து வருகின்றனர். இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் வரும் பகுதியில் பவுன்சர்களை நிறுத்தி வைத்திருந்ததும் அச்சத்தை ஏற்படுத்தியது" என்றனர்.

இது குறித்து சமூக அமைப்பினர் கூறுகையில், “புதுச்சேரியில் பல கடற்கரை பகுதிகள் தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடற்கரை மணல்பரப்பு பகுதிக்கு செல்ல நுழைவுக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது மத்திய அரசு உத்தரவிலும் தெளிவாக உள்ளது. அதை புதுச்சேரி அரசு கடைபிடிப்பதில்லை.

மக்களின் பொது பொழுதுபோக்கு பகுதியான கடற்கரையில் நுழைவுக்கட்டணத்தை கட்டாயமாக வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் மேற்பார்வை செய்ய வேண்டும். அதுபோல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

கடும் போக்குவரத்து நெரிசல்: இன்று மாலை காற்றாடி திருவிழா பார்க்க பலரும் வந்ததால் அரியாங்குப்பத்தில் இருந்து சின்ன வீராம்பட்டினம் வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. அதன்பின்னர், நூறு ரூபாய் டோக்கன் வாங்கி ஈடன் கடற்கரைக்கு சென்றோர் பலரும் பட்டங்கள் பறக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். காற்று வீசுவது குறைவாக இருந்ததால் பட்டம் அதிகளவில் பறக்காததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x