Last Updated : 25 Aug, 2024 09:53 PM

1  

Published : 25 Aug 2024 09:53 PM
Last Updated : 25 Aug 2024 09:53 PM

“மூத்த நடிகர்கள் எல்லாம் பற்கள் விழுந்து...” - ரஜினிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி

வேலூர்: வயதாகி, பல்லுப்போன, நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயேநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியார் 119வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் இவ்விழாவில் காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள வாரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘நீர் நிலை ஆக்கிரமிப்புகளை சரிவர அகற்றவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. வீடு கட்ட வேறு இடம் இல்லை, மாற்று இடம் தந்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறுகின்றனர். சில இடங்களில் பள்ளி கூடங்களும் நீர்நிலைகளில் கட்டியுள்ளனர்.

இதுதவிர, நீர் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டு தான் உள்ளோம். மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகம் தொடர்ந்து அரசியல் பேசுகின்றனர். இது தொடர்பாக பேசிப்பேசி அலுத்துவிட்டோம். அதேநேரம், தேவகவுடா பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.

அவர் தொடக்கத்திலிருந்தே நல்ல எண்ணம் இல்லாதவர். அவருடன் நான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளேன். அவருக்கு தமிழகம் மீது துளிகூட நல்ல எண்ணம் கிடையாது. நந்தன் கால்வாய் இந்த ஆண்டு முழுமை பெறும். அதற்காக தனிக்கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, செய்தியாளர்கள் சிலர் குறிக்கிட்டு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் குறித்து பேசியதற்கு விளக்கம் கேட்க முயன்றபோது, அமைச்சர் துரைமுருகன், ‘‘மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி, பல் விழுந்து, தாடி வளர்த்து, சாகிற நிலையில் கூட நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை" என தனக்கே உரிய பாணியில் ரஜினியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

அப்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் எம்பி கதிர்ஆனந்த், குடியாத்தம் எம்எல்ஏ அமலுவிஜயன், மாநகராட்சி 1வது மண்டலக்குழுத்தலைவர் புஷ்பலதா வன்னியராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x