Published : 25 Aug 2024 07:08 PM
Last Updated : 25 Aug 2024 07:08 PM

இராமநாதபுரம் மருத்துவமனையில் தலை காய சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ் அறிவிப்பு

ஓபிஎஸ்

சென்னை: இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக் காயங்களுக்கான சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை, மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. என்றாலும், தலைக் காயங்களுக்கான சிகிச்சை பிரிவு இங்கு ஏற்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக, பரமக்குடி, இராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களுக்கு தலைக்காயம் ஏற்பட்டால், காயமடைந்தவர்களை 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்லக்கூடிய அவல நிலை நிலவுகிறது. இதன் விளைவாக, தலைக் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க இயலாத நிலையில், உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமான விபத்துகள் காரணமாக, மூளையில் ரத்த கசிவு, மூளையில் ரத்தம் உறைதல், மூளை நரம்புகளில் ரத்தம் உறைதல் ஆகியவை ஏற்பட்டு பாதிக்கப்பட்டோர் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தலைக் காயத்திற்கான ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லாத காரணத்தால், மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புண்ணிய திருத்தலங்கள் அதிகம் நிறைந்துள்ள இராமநாதபுரம் பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வதன் காரணமாக விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதால், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. இது குறித்து இப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டும், அதன்மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் கூடிய தலைக் காய சிகிச்சை பிரிவினை உடனடியாக அமைக்கவும், 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் அதற்குரிய மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமிக்கப்படவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை வலியுறுத்தி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், 30-08-2024 - வெள்ளிக்கிழமை காலை 10-30 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஆர். தர்மர், எம்.பி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x